2010-11-27 15:39:20

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
ஒவ்வோர் ஆண்டும் திருவருகைக் காலத்துடன் ஒரு புதிய திருவழிபாட்டு ஆண்டை நாம் துவக்குகிறோம். புத்தாண்டு என்றாலே, புதியனவற்றைப் புகுத்தும் எண்ணம் மனதில் எழுகிறது. இந்தத் திருவழிபாட்டு ஆண்டும் புதிய எண்ணங்களை, அந்த எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் புதிய கண்ணோட்டங்களை, புதிய மனதை நமக்குள் உருவாக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு, பதியதொரு திருவழிபாட்டு ஆண்டை ஆரம்பிப்போம்.

சென்ற ஆண்டு திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு நவம்பர் 29ம் தேதி வந்தது. இவ்வாண்டு அது நவம்பர் 28ம் தேதியில் வந்துள்ளது. நாள் காட்டியில் வரும் விழாக்கள் பொதுவாக பின்னோக்கி நகரும். ஆனால், காலம் பின்னோக்கி நகருமா? நகராது.
குளிர்காலம் ஆரம்பமாகி உள்ளது. குளிர் காலத்தில் பகல் நேரம் மிகவும் குறுகி விடும். எனவே, பல நாடுகளில் பகல் ஒளியைக் காப்பாற்றும் நேரம் (Daylight Saving Time) என்ற காரணம் காட்டி, கடிகாரத்தின் முள்ளை ஒரு மணி நேரம் பின்னோக்கித் தள்ளி வைத்துக் கொள்வார்கள். குளிர்காலம் முடிந்து வசந்தம் வந்ததும், கடிகார முள்ளை மீண்டும் பழையபடி திருப்பி வைத்துக் கொள்வார்கள்.
நமது நாள் காட்டியில் திருநாட்கள் முன், பின்னாக வர முடியும்; நமது வசதிக்காக கடிகார முள்ளைத் திருப்பி வைக்க முடியும். ஆனால், காலத்தை முன்னோக்கியோ, பின்னோக்கியோ தள்ள முடியுமா? முடியாது.
காலம் பின்னோக்கிப் போனால் நன்றாக இருக்குமே என்று நம்மில் பலர் பல நேரங்களில் ஏங்குகிறோம். இல்லையா? நமது குழந்தைப் பருவம், வாலிபப் பருவம் இவைகளை மீண்டும் வாழ ஆசைப்படுகிறோம். அவ்வப்போது கற்பனையில், கனவில் அல்லது நாம் பேசிக் கொள்ளும் கதைகளில் இந்தப் பருவத்தை எட்டிப் பார்த்து வருகிறோம். ஏக்கப் பெருமூச்சு விடுகிறோம்.
நம் தனிப்பட்ட வாழ்வில் பின்னோக்கிப் போவதற்கு ஏங்குவது போல், உலக வரலாறும் பின்னோக்கிப் போவதற்கு ஆசைப் படுகிறோம். நம் மூதாதையர் வாழ்ந்த நிம்மதியான வாழ்வை எண்ணிப் பார்க்கிறோம். 'பிரிட்டிஷ்காரன்' ஆண்ட காலம் பிரமாதம் என்றெல்லாம் பேசுபவர்களைப் பார்த்திருக்கிறோம்.
நாம் என்னதான் ஏங்கினாலும் காலச் சக்கரம் பின்னோக்கிச் சுழலாது. அது நிச்சயம். ஆனால், நாம் வாழும் வாழ்க்கை முறையை பின்னோக்கித் தள்ளலாம். நம் மூதாதையர் வாழ்ந்த வாழ்க்கை உன்னதமானதென்று உணர்ந்தால், அந்தக்காலத்து வாழ்க்கை முறைக்கு நாம் திரும்பிச் செல்ல முடியும். அது நம் சக்திக்கு உட்பட்டது. இப்படி வாழும் பல குழுக்கள் உலகில் 2010ம் ஆண்டு இருக்கத்தான் செய்கின்றன.
மனித குலம் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி வாழ்ந்த காலம் ஒன்று இருந்தது. இன்று, இந்த வளங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தேவைக்கும் அதிகமாகப் பாழடித்து, இயற்கையைச் சீரழித்து வருகிறோம். நமது அடுத்தத் தலைமுறையைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல் இயற்கையைத் தேவைக்கும் அதிகமாகச் சுரண்டி வருகிறோம். இந்த அநீதிகளைச் சரி செய்யும் வகையில் ஒவ்வொரு நாட்டிலும் சிறு சிறு குழுக்கள் வாழ்க்கை முறையை மாற்றி வாழ்ந்து வருகின்றன. குறைவான அளவு எரிபொருளின் பயன்பாடு, சூரிய ஒளி சக்தியின் பயன்பாடு, மறுசுழற்சி என்று பல வழிகளில் வாழ்க்கை முறையை மாற்றி வாழ்ந்து வருகின்றன இக்குழுக்கள். ஒவ்வொரு நாட்டு அரசும் இயற்கையின் மீது இன்னும் சிறிது அக்கறையுடன் செயல்பட்டால் நமது இயற்கையும், உலகமும் காப்பற்றப்படுவதற்கு இன்னும் வாய்ப்புக்கள் உள்ளன.
உலகம் காப்பற்றப்படுவதைப் பற்றி இன்று நாம் பேச வேண்டும். திருவருகைக் காலத்தின் இந்த முதல் ஞாயிறன்று நமக்குத் தரப்பட்டுள்ள வாசகங்கள் இப்படி நம்மை எண்ண வைக்கின்றன பேச வைக்கின்றன.

உலகைக் காப்பாற்றும் முயற்சியில் பல நாடுகளில் இளையோர் விழித்தெழுந்திருப்பது நல்லதொரு அறிகுறியாகத் தெரிகிறது. இந்த முயற்சிகளில் ஒன்றாக, ஒவ்வோர் அரசும் இராணுவத்திற்குச் செலவிடும் தொகையைக் குறைப்பது பற்றி இளையோர் குரலெழுப்பி வருகின்றனர். இராணுவத்திற்கு ஆகும் செலவைக் குறைத்து, அத்தொகையைக் கொண்டு மக்களின் வாழ்வுத்தரத்தை, முக்கியமாக, ஏழை மக்களின் வாழ்வுத்தரத்தை உயர்த்த திட்டங்கள் தீட்டுங்கள் என்று இளையோர் பல வழிகளில் குரலெழுப்பி வருகின்றனர். கேட்பதற்கு அற்புதமான நற்செய்தி இது!
அன்புள்ளங்களே, இராணுவச் செலவு பற்றி பல புள்ளி விவரங்களைத் தரலாம். ஒரே ஒரு புள்ளி விவரத்தைத் தர நான் விழைகிறேன்: 2007ம் ஆண்டு உலகின் பல நாடுகளும் இராணுவத்திற்கென செய்த செலவு 5,850,000 கோடி ரூபாய். (1.339 trillion Dollars) அதே ஆண்டு ஐ.நா. அமைப்பு மேற்கொண்ட அத்தனை மனித சமுதாய முன்னேற்ற முயற்சிகளுக்கும் ஆன செலவு (4.2 billion dollars) இராணுவச் செலவுகளுக்கான தொகையில் இரண்டு விழுக்காடு கூட இல்லை. இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் கறுப்புப் பணத்தைப் பற்றி ஒரு ஞாயிறு சிந்தனையில் நாம் சிந்தித்தபோது, ட்ரில்லியன் டாலர்களைப் பற்றி பேசினோம். உலகில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை வறியோருக்குப் பகிர்ந்தளித்தால், உலகில் வறுமை என்பதை முற்றிலும் அகற்றலாம் என்று சொன்னோம். அதையே இன்றும் சொல்வோம். உலக அரசுகள் இராணுவத்திற்குச் செலவிடும் தொகையில் பாதித் தொகையை, அல்லது, பத்தில் ஒரு பங்குத் தொகையை ஏழைகளுக்குச் செலவிட்டால், உலகின் வறுமையைப் பெரிதும் குறைக்கலாம்.

இராணுவத்தைப் பற்றி ஏன் இவ்வளவு பெரிய விளக்கம், ஆராய்ச்சி என்று கேள்வி எழலாம். இரு காரணங்கள் உண்டு.
முதல் காரணம்: அண்மையில் இந்தியாவிலும் இன்னும் பிற ஆசிய நாடுகளிலும் அமெரிக்க அரசுத்தலைவர் மேற்கொண்ட பயணம் ஒரு காரணம். தீபாவளியை ஓட்டி ஒபாமா இந்தியா வந்ததால், வாண வேடிக்கைகளுடன் அவர் வரவை கொண்டாடினோம். இப்பயணத்தை ஒரு பெரும் விழாவைப் போல் நமது ஊடகங்கள் அலங்கரித்தாலும், இந்தப் பயணத்தின் ஒரு முக்கிய காரணம்? அமெரிக்காவின் இராணுவத் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்பதற்கான வழிமுறைகளைக் கண்டு பிடிக்க ஒபாமா முயன்றார். வெற்றியும் கண்டார். அவரது பயணத்தால், அமெரிக்கா இந்தியாவுக்கு பல பில்லியன் டாலர் மதிப்புள்ள இராணுவத் தளவாடங்களை விற்க உள்ளது. தீபாவளி நேரத்தில் ஒபாமா வந்தது பொருத்தமாகத்தான் தெரிகிறது. தீபாவளி நேரத்தில் வெடிகள், மத்தாப்புக்கள் என்று நாம் கோடிக்கணக்கான மதிப்புடைய காசை கரியாக்குகிறோம். அதைக் குழந்தைத் தனம் என்று கடிந்து கொள்கிறோம். ஆனால், பல பில்லியன் டாலர்களை இராணுவத்திற்காகக் கரியாக்கும் இந்திய அரசைப் பார்த்து என்ன சொல்வது?

இராணுவத்தைப் பற்றி நான் பேச இரண்டாவது காரணம் நமது முதல் வாசகம். இந்த வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் இறுதி நாட்கள் குறித்து காணும் ஒரு அழகான கனவு இது:
எசா. 2 : 4-5
அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது: அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.
வாள்கள் கலப்பை கொழுக்களாக மாறும்.
ஈட்டிகள் அறுவடை செய்யும் அரிவாள்கள் ஆகும்.
உயிர்களை அறுவடை செய்யும் படை வீரர்கள் பயிர்களை அறுவடை செய்யும் அற்புதமானப் பணியில் ஈடுபடுவார்கள்.
போர் பயிற்சிகளுக்குப் பதிலாக, ஏர் பிடித்து உழுகின்ற பயிற்சிகள் நடைபெறும்.
அடுக்கு மொழியில் சொல்லப்பட்டுள்ள இந்த அற்புதமான, அழகான கற்பனை, நாம் நம் குழந்தைப் பருவத்திற்கு, வாலிபப் பருவத்திற்கு அல்லது ‘அந்த காலத்திற்குச்’ செல்லும் கற்பனையைப் போன்றது.
இவைகள் கற்பனைகளாக, கனவுகளாக மட்டுமே இருக்க முடியும். நனவாக மாறவே முடியாது என்று நம்மில் பலர் தீர்மானித்து விட்டோம். எனவே, இப்படி ஒரு காட்சியை நினைத்துப் பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விடலாம், அல்லது ஒரு விரக்தி சிரிப்பு சிரிக்கலாம். நமது ஏக்கத்திற்கும், விரக்திக்கும் காரணம் உள்ளது. எசாயாவின் கனவில் போர் கருவிகள் விவசாயக் கருவிகளாக மாறுகிறது. நாம் வாழும் சூழலில் விவசாயக் கருவிகள் போர் கருவிகளாக மாறி வருகின்றன. பயிர்களை அறுவடை செய்யும் அரிவாள் உயிர்களை அறுவடை செய்யும் கொடூரம் நடந்து வருகிறது.
மனிதர்கள் கண்டுபிடித்த அனைத்துக் கருவிகளையும் கொண்டு ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். அழிவை மட்டுமே முன்னிறுத்தும் செயல்கள் பெருகி வருவதைப் பார்க்கும் போது, கலிகாலம், முடிவு காலம் ஆரம்பித்து விட்டதோ என்றும் பல முறை குமுறுகிறோம். முடிவு என்றாலே, அழிவுதானா? இல்லை. அது நம் கண்ணோட்டத்தைப் பொறுத்தது.

முடிவு, இறுதி என்பவைகளை அழிவு என்று பார்க்கலாம், அல்லது நிறைவு என்றும் பார்க்கலாம். நமக்கு இன்று வழங்கப்பட்டுள்ள மூன்று வாசகங்களும் முடிவு காலத்தைப் பற்றி சொல்கின்றன. அழிவும் இருளும் இருக்கும் என்று சொன்னாலும், நம்பிக்கையுடன், விழிப்புடன் இதை எதிர்நோக்கும்படி மூன்று வாசகங்களும் சொல்கின்றன. ஒவ்வொரு வாசகத்தின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள வரிகள் நம் மனதில் நம்பிக்கையை விதைக்கும் வரிகள்:
யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.
எசாயா 2 : 5
இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள். உரோமையர் 13 : 14
ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார். மத்தேயு 24 : 44

சென்ற ஆண்டு திருவருகைக் காலத்தின் முதல் வாரத்தில் நான் சொன்ன இறுதி வரிகளை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.அன்பர்களே, இந்த திருவருகைக் காலம் முழுவதும் நம்பிக்கைத் தரும் செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சி செய்கிறேன். நீங்களும், வத்திக்கான் வானொலிக்கு உங்கள் உள்ளத்தில் நம்பிக்கையை விதைத்த நல்ல பல சம்பவங்களை, மேற்கோள்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நம்பிக்கை தரும் நல்ல செய்திகளை இன்னும் அதிகமாகப் பரப்ப முயல்வோம்.







All the contents on this site are copyrighted ©.