2010-11-27 15:36:38

அணு ஆயுத களைவுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கிறார் திருத்தந்தை.


நவ 27, 2010. சர்வதேச அளவில் அமைதி, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காக ஜப்பான் நாடு ஆற்றி வரும் பணிகளைப் பெரிதும் பாராட்டுவதாகத் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

திருப்பீடத்திற்கான ஜப்பான் நாட்டின் புதிய தூதுவர் Ridekazu Yamagucee யிடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்ற சந்திப்பில் இவ்வாறு உரைத்த பாப்பிறை, ஏழை நாடுகளுக்கான உதவிகளின் மூலம் ஜப்பான் நாடு அந்நாடுகளில் அமைதியும் ஜனநாயகமும் தழைக்க உதவியுள்ளது எனவும் கூறினார்.

ஜப்பானின் ஹீரோஷீமா மற்றும் நாகாசாகியில் அணுகுண்டு வீசப்பட்டதன் 75ம் ஆண்டு தற்போது நினைவுகூரப்படுவது குறித்தும் தன் உரையின் போது குறிப்பிட்டு, அணுஆயுத களைவு குறித்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார் பாப்பிறை.

ஆயதங்களில் செலவளிக்கப்படும் தொகை, நாடுகளின் கல்வி, நல ஆதரவு மற்றும் பொருளாதார சமூக வளர்ச்சித் திட்டங்களுக்கு என திருப்பி விடப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் சர்வதேச சமுதாயத்தின் முன் வைத்தார் பாப்பிறை.

ஜப்பான் நாட்டில் மனச்சான்றின் சுதந்திரமும் வழிபாட்டு சுதந்திரமும் மதிக்கப்படுவதைக் குறித்து பாராட்டையும் மகிழ்ச்சியையும் வெளியிட்ட பாப்பிறை, ஜப்பான் கத்தோலிக்கத் தலத்திருச்சபை, நாட்டின் கலாச்சார, சமூக மேம்பாட்டிற்காக உழைப்பதுடன் தன் கல்வி நிலையங்கள், மருத்துவ மனைகள் மற்றும் பிறரன்பு நிறுவனங்கள் மூலம் சேவையாற்றி வருவது குறித்தும் எடுத்தியம்பினார்.








All the contents on this site are copyrighted ©.