2010-11-26 15:02:17

நவம்பர் 27. நாளும் ஒரு நல்லெண்ணம்


எதிர்மறைச் சூழலிலும் நேர்மையாய் இருப்போம் என்ற தலைப்பில் ருக்மணி பன்னீர்செல்வம் என்பவர், ‘அற்புதத் தடாகம்’ என்ற வலைத் தளத்தில் கூறியுள்ளதைக் கொஞ்சம் நோக்குவோமா?.

எல்லா நேரங்களிலும் நம்முடையச் சூழல் நாம் விரும்புவது போல் அமைந்து விடுவதில்லை.

பல நேரங்களில் எதிர்பாராமலே நாம் எதிர்மறைச் சூழலில் சிக்கிக் கொள்கிறோம்.

இப்படிப்பட்டச் சூழ்நிலைகளில் இயல்பாய் இருப்பதென்பதும், இயல்பு நிலை மாறாமல் நடந்துகொள்வதென்பதும் கடினமானதுதான்.

எதிர்மறைச்சூழலில் நாமும் எதிர்மறையாகவே நடந்து கொண்டால் நிலைமை இன்னும் மோசமாவதோடு எதிர்மறையாய் நாம் நடந்துகொண்ட நாள் முழுவதுமே சினத்தாலும், அதிருப்தியாலும் நிரம்பி நாம் துன்புறவேண்டியுள்ளது.

பின்பற்றுவதற்குச் சற்று கடினம்தான் என்றாலும் எதிர்மறைச் சூழல்களிலும் நாம்

நிலை மாறாமல் இருப்பது பெரிதும் அவசியமானதாகும்.

- அமைதியிழந்து காணப்படும் நேரத்தில் பதிலளிப்பதைத் தவிர்க்கலாம்.

- குரலை உயர்த்திப் பேசுபவர்களிடம் நாம் அதே தொனியில் பேச வேண்டுமென்பதில்லை.

- “ஒவ்வொரு இடர்பாட்டிலும் ஒரு வாய்ப்பு மறைந்துள்ளது” என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் -

கூறுகிறார். எதிர்மறைச்சூழலிலும் நமக்கான வாய்ப்பு எதுவென பார்க்கலாம்.

இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை என்பது எல்லாரும் அறிந்திருப்பதுதான்.

இன்பத்தை மகிழ்வோடு கொண்டாடுகின்ற நாம் துன்பத்தைக் கொண்டாட இயலாது.

ஆனால் எப்படிப்பட்ட சிக்கலானச் சூழ்நிலைகளையும் எதிர்கொள்கின்ற பக்குவம்

பெற்று விட்டோமெனில் துன்பம் என்பது ஏது? பக்குவப்படுவோமா?








All the contents on this site are copyrighted ©.