2010-11-26 14:56:12

திருப்பீட அதிகாரி கர்தினால் Jean -Louis Tauran பாகிஸ்தானில் மூன்று நாள் பயணம்


நவ.26, 2010. ஆசியா பீபியின் விடுதலை குறித்த தீர்வு, இன்னும் பிற மதத்தொடர்பான பதட்டங்கள் சூழ்ந்துள்ள பாகிஸ்தானுக்குத் திருப்பீடத்தின் அதிகாரி ஒருவரின் வருகை மிகுந்த நம்பிக்கையைத் தருகிறதென்று பாகிஸ்தான் பேராயர் ஒருவர் கூறியுள்ளார்.
பல்சமய உரையாடலுக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Jean -Louis Tauran மூன்று நாள் பயணமாகப் பாகிஸ்தானை இவ்வியாழன் சென்று சேர்ந்த போது, பாகிஸ்தான் ஆயர் பேரவையின் தலைவரும் லாகூர் உயர் மறைமாவட்டப் பேராயருமான லாரன்ஸ் சல்தானா இவ்வாறு கூறினார்.
இவ்வியாழனன்று கர்தினால் Tauran பாகிஸ்தான் அரசுத் தலைவர் Asif Ali Zardariஐச் சந்தித்து, ஆசியா பீபிக்கு விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனையை நீக்குமாறு திருத்தந்தை விடுத்துள்ள விண்ணப்பத்தைக் குறித்து பேசினார். மேலும் அவர் சிறுபான்மையினருக்கான அமைச்சர் Shahbaz Bhattiஐயும் சந்தித்துப் பேசினார்.
சிறுபான்மை மதங்களுக்கு எதிராக, பாகிஸ்தானில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சகிப்புத் தனமையற்ற நிலை பெரும் கவலையை உருவாக்குகிறது என்றும், இந்தச் சூழலில் கர்தினால் Tauranன் வருகை ஒப்புரவுக்கும் உரையாடலுக்கும் தேவையான சூழ்நிலையை உருவாக்கும் என்று தான் நம்புவதாகவும் பேராயர் சல்தானா FIDES செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, பல்வேறு சட்டப் பிரச்சனைகள் காரணமாக ஆசியா பீபியின் விடுதலை இன்னும் நிறைவேறவில்லை என்றும், அவரை விடுவிப்பதற்கு பல தடைகள் உள்ளதென்றும் ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது. மேலும், இந்த வழக்கில் ஈடுபட்டுள்ள சிறுபான்மையினருக்கான அமைச்சர் Shahbaz Bhattiக்கும், ஆசியா பீபியின் கணவர் மற்றும் குழந்தைகளுக்கும் கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன என்று செய்திகள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.