2010-11-25 15:17:20

பூச்சி மருந்தின் கொடுமைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரள அரசு செய்யும் உதவிகளுக்குத் தலத் திருச்சபை வரவேற்பு


நவ.25, 2010. Endosulfan என்ற பூச்சி மருந்தின் பயன்பாடு விளைத்துள்ள கொடுமைகளில் பாதிக்கப்பட்டக் குடும்பங்களுக்கு கேரள அரசு உதவிகள் செய்ய முன் வந்திருப்பதைக் கேரளத் தலத் திருச்சபை வரவேற்றுள்ளது.
Endosulfan என்ற பூச்சி மருந்து நாடெங்கும் தடை செய்யப்பட வேண்டுமென்று இச்செவ்வாயன்று Tellicherry உயர்மறைமாவட்டப் பேராயர் ஜார்ஜ் வலியமட்டம் விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து, கேரளா அரசு செவ்வாயன்று நடத்திய உயர்மட்டக் குழுவின் பரிந்துரையால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசின் உதவித் திட்டங்களால் நிதி உதவிகளும், குழந்தைகள் படிப்பதற்கான உதவிகளும் வழங்கப்படும். மேலும் அக்குடும்பங்களின் கடன்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அரசின் இந்த உதவித் திட்டங்கள் பூச்சி மருந்தினால் பாதிக்கப்பட்டவர்களின் காயப்பட்ட மனங்களுக்கு அளிக்கப்படும் மருந்து போன்றது என்று Tellicherry பேராயர் வலியமட்டம் கூறினார்.
Endosulfan என்ற பூச்சி மருந்து விவசாயத்தில் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்றும், 1981ம் ஆண்டு முதல் இது முந்திரிப் பயிர்களில் பயன்படுத்தப்பட்டு வந்ததன் விளைவு இப்போது தெரிகிறதென்றும் செய்திகள் கூறுகின்றன.இப்பூச்சி மருந்தின் பயன்பாட்டால், பலர் உயிரிழந்துள்ளனர், மற்றும் பலரது உடல் நலக்குறைவுக்கும், பிறக்கும் குழந்தைகள் உடல் ஊனமுற்றுப் பிறப்பதற்கும் இது காரணமாக உள்ளதென தெரியவந்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.