2010-11-25 15:18:25

திருத்தந்தையின் உரையாடல்கள் அடங்கிய "உலகின் ஒளி" புத்தகத்தைக் குறித்து உலக நிறுவனங்களின் கருத்துக்கள்


நவ.25, 2010. எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டின் அவசியத்தைத் திருத்தந்தை தன் உரையாடலில் வெளியிட்டுள்ளதை அகில உலக காரித்தாஸ் அமைப்பு மகிழ்வுடன் வரவேற்றுள்ளது.
திருத்தந்தை, திருச்சபை, நமது காலத்திற்கான அடையாளங்கள் ஆகியவை குறித்த திருத்தந்தையின் உரையாடல்கள் அடங்கிய "உலகின் ஒளி" என்ற புத்தகம் இச்செவ்வாயன்று வெளியானதைத் தொடர்ந்து, பல்வேறு உலக நிறுவனங்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.
எய்ட்ஸ், HIV பிரச்சனைகளை சரிவர அணுகி, அவற்றைத் தீர்ப்பதற்கு உலகம் இன்னும் அதிகம் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று திருத்தந்தை கூறியுள்ளதைச் சுட்டிக் காட்டி பேசிய காரித்தாஸ் அமைப்பின் செயலர் Lesley-Anne Knight, இப்பிரச்சனை குறித்த திருத்தந்தையின் கூற்றுகள் அவரது அக்கறையைப் பெரிதும் காட்டுகின்றன என்று கூறினார்.
165 நாடுகளில் பல்வேறு துயர்துடைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அகில உலக காரித்தாஸ் அமைப்பு, நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் HIV, எய்ட்ஸ் குறித்த பணிகளில் ஈடுபட்டுள்ளது.கருத்தடை சாதனம் குறித்து திருத்தந்தை கூறியுள்ள கருத்துக்கள் வரவேற்கத் தக்கதென்று உலக நலவாழ்வு நிறுவனமான WHO தன் கருத்தை வெளியிட்டுள்ளது. மேலும் அயல் நாடுகளின் முன்னேற்றத்திற்கான கத்தோலிக்க அமைப்பான CAFODம் திருத்தந்தையின் கருத்துக்களை வரவேற்றுள்ளது.







All the contents on this site are copyrighted ©.