2010-11-24 15:48:26

பெண்களுக்கெதிரான வன்முறைகள் ஒழிக்கப்படுவதற்குத் தனிப்பட்ட துறைகளுக்கு ஐ.நா.பொதுச் செயலர் வேண்டுகோள்


நவ.24,2010. உலக அளவில் பெண்களும் சிறுமிகளும் எதிர்கொள்ளும் வன்முறைகள் ஒழிக்கப்படுவதற்குத் தனிப்பட்ட துறைகள், குறிப்பாக தொழிலதிபர்கள் முயற்சிக்குமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.

பாலியல் அடிப்படையில் நடத்தப்படும் வன்முறை ஒவ்வொருவரின் பிரச்சனை என்ற உணர்வு சமூகங்களில் அதிகரிக்க வேண்டும் மற்றும் இவ்வன்முறையை நிறுத்துவது ஒவ்வொருவரின் கடமையாகவும் இருக்கின்றது என்றும் மூன் கூறினார்.

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாளை முன்னிட்டு நியுயார்க்கில் ஐ.நா.தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இவ்வாறு உரையாற்றினார் மூன்.

இத்தகைய வன்முறைகள் 2015ம் ஆண்டுக்குள் ஒழிக்கப்படுவதற்கு நாடுகள் அனைத்தும் உறுதியான சட்டங்கள் மற்றும் செயல் திட்டங்கள் மூலம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று 2008ம் ஆண்டில் ஐ.நா.பொதுச் செயலர் முன்வைத்தத் திட்டத்தையும் நாடுகளுக்கு நினைவுபடுத்தினார் மூன்.

உலகில் மூன்று பெண்களுக்கு ஒருவர் வீதம் அடிக்கப்படுகின்றனர், பாலியலுக்குக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் மற்றும் பிற வன்முறைகளைச் சந்திக்கின்றனர் என்று ஐ.நா.புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது.

உலகில் ஆண்டுதோறும் நவம்பர் 25ம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது







All the contents on this site are copyrighted ©.