2010-11-24 13:55:33

நவம்பர் 25 – நாளும் ஒரு நல்லெண்ணம்


வாழ வழிகள் எத்தனையோ உண்டு. எப்படியும் வாழலாம் என்பர் சிலர். இப்படித்தான் வாழ வேண்டும் என்பர் சிலர்.

மனிதன், மனிதனாக வாழ்கிறான் என்றால் அதற்கு மூன்று காரணங்கள் கூறலாம்.

ஒன்று, அவனுக்கு தவறு செய்யக்கூடிய சூழ்நிலைகளே ஏற்படாமல் இருப்பது.

இரண்டு, கடுமையான தண்டனைக்கு பயந்து தவறின் பக்கம் செல்லாமை.

மூன்றாவது, தவறுகள் செய்ய வாய்ப்புகள் கிடைத்தும் தவறு செய்வதை தவிர்க்கும் குணம்!

இதுதான் பகுத்தறிவு! இது நல்லது, செய்யலாம், இது தவறு, செய்யக் கூடாது என பகுத்தறியும் குணம், ஆறாவது அறிவு!

இந்தப் பகுத்தறிவு சாதாரணமாக அனைவருக்குமே உள்ளதுதான்.

பின் ஏன் தவறுகள், கொடுமைகள், கொடூரங்கள், பஞ்சமா பாதகங்கள்?!

மனச் சாட்சியத்தின் படியும், மனு நீதியின் படியும், சட்டத்தின் படியும், தவறு எனத் தெரிந்தும் அவற்றையே செய்கிறான் மனிதன்.

இந்த உலகில் நாம் வாழும் ஒவ்வொரு வினாடித் துளிகளும் நமக்கென்றே பரிசளிக்கப்பட்ட மிக அழகான தருணங்கள். ஒவ்வொரு தருணத்திலும் பல்வேறு அனுபவங்கள், அதற்குள் பொதிக்கப்பட்ட சின்ன சின்னச் சந்தோஷங்கள் என நிறைந்திருக்கின்றன. அவற்றைத் தேர்வு செய்யும் சுதந்திரமும் நம் கையில் தான் இருக்கிறது.

இருப்பினும் நாம் சென்று கொண்டிருக்கும் பாதை என்ன?

நம் வாழ்வில் இதுவரை நாம் என்ன சாதித்துள்ளோம்?

நம் கனவு மற்றும் இலட்சியம் என்ன?

நம் வாழ்க்கைக்காக நாம் போட்டுள்ள பெரிய திட்டம்தான் என்ன?

நம் மரணத்துக்குப் பின் நாம் எப்படி நினைவுகூரப்படுவோம்?

சிந்திப்போம். சிந்தனைகளைச் செயலாக்குவோம்.








All the contents on this site are copyrighted ©.