2010-11-24 15:42:55

குடியேற்றதாரர்களுக்கு அதிகப்படியான ஆதரவு தேவைப்படுகின்றது- திருப்பீட உயர் அதிகாரி


நவ.24,2010. தங்கள் வீடுகளைவிட்டு, கட்டாயமாக வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகும் குடியேற்றதாரர்களுக்கு அதிகப்படியான ஆதரவு தேவைப்படுகின்றது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

கொலம்பிய நாட்டு பொகோட்டாவில், இலத்தீன் அமெரிக்க நாடுகளின் “குடியேற்றதாரர்” குறித்து இடம் பெற்ற கூட்டத்தின் நிறைவுத் திருப்பலியில் மறையுரையாற்றிய திருப்பீடக் குடியேற்றதாரர் அவைத் தலைவர் பேராயர் அந்தோணியோ மரிய வேலியோ(Antonio Maria Velgiò) இவ்வாறு கூறினார்.

நாடுகளை விட்டு வெளியேற்றப்படும் குடியேற்றதாரர்களின் தேவைகளைக் கவனிப்பதற்கென எந்தவிதத் தனிப்பட்ட சமூக நிறுவனங்கள் இல்லை என்பதால் இவர்களுக்குக் கிறிஸ்தவச் சமூகங்கள் ஆதரவு அளிக்குமாறு வலியுறுத்தினார் பேராயர் வேலியோ.

ஒருவாரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் சுமார் 19 இலத்தீன் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும், இன்றைய உலகின் 21 கோடியே 40 இலட்சம் குடியேற்றதாரரில் பாதிப் பேர் பெண்கள் என்று சர்வதேச காரித்தாஸ் அறிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.