2010-11-23 15:22:49

“உலகின் ஒளி” புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது


நவ.23,2010. திருத்தந்தை, திருச்சபை, காலத்தின் அடையாளங்கள் ஆகிய தலைப்புகளில் ஜெர்மன் நிருபர் பீட்டர் சீவால்டு திருத்தந்தை 16ம் பெனடிக்டுடன் நடத்திய உரையாடலை வைத்து எழுதப்பட்ட “உலகின் ஒளி” என்ற புத்தகம் இச்செவ்வாயன்று நிருபர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

புதிய நற்செய்திப்பணியை ஊக்குவிப்பதற்கானத் திருப்பீட அவையின் தலைவர் பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லாவும் பத்திரிகையாளர் முனைவர் லூயிஜி அக்காத்தோலியும் இந்நூலை வெளியிட்டுக் கருத்து தெரிவித்தனர்.

திருச்சபை குறித்து திருத்தந்தை கூறிய கருத்தில், புதிய நற்செய்திப்பணி தேவைப்படும் ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம் என்றும் திருச்சபை எல்லாவற்றையும் செய்ய வேண்டிய ஒரு கருவி அல்ல, மாறாக, கிறிஸ்துவிடமிருந்து வந்த வாழும் உறுப்பு என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருப்பதாகப் பேராயர் ஃபிசிக்கெல்லா தெரிவித்தார்.

மேலும், இந்தப் புத்தகத்திற்குத் திருத்தந்தை வழங்கியுள்ள நேர்முகத்தில், கருத்தடைச் சாதனப் பயன்பாட்டை அவர் நியாயப்படுத்தவில்லை, மாறாக சில குறிப்பிட்ட சூழல்களில் அது ஒழுக்க நன்னடத்தை நோக்கிய முதல் படியாக இருக்கக்கூடும் என்பதையே தெரிவித்துள்ளார் என்றார் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி.

எயிட்ஸ் பிரச்னைக்கு கருத்தடைச் சாதன பயன்பாடு, ஓர் உண்மையான, ஒழுக்க ரீதி தீர்வாக இருக்க முடியாது என்று திருத்தந்தை தன் பேட்டியில் எடுத்துரைத்துள்ளதையும் இங்கு குறிப்பிட்டார் குரு லொம்பார்தி.

கருத்தடைச் சாதனப் பயன்பாடு என்பது மனிதர்களிடையேயான அன்பின் வெளிப்பாடு என்ற அர்த்தத்தை இழக்கவைப்பதாகவும், போதை மருந்து போல் மாறும் அபாயம் தருவதாகவும் உள்ளது என்ற பாப்பிறையின் வார்த்தைகளையும் திருப்பீடப் பேச்சாளர், சுட்டிக்காட்டினார்.







All the contents on this site are copyrighted ©.