2010-11-23 15:29:40

நவம்பர் 24 நாளுமொரு நல்லெண்ணம்


கடற்கரையில் நான் நிற்கிறேன். என் கண் முன் கப்பல் ஒன்று பாய்மரம் விரித்து, தன் கடல் பயணத்தைத் துவங்குகிறது. நேரம் செல்லச் செல்ல, அது உருவத்தில் சிறுத்து, ஒரு சிறு புள்ளியாக மாறி, தொடுவானத்தில் மறைகிறது. "அதோ, அவள் போய்விட்டாள்." என்று அருகிலிருந்தவர் சொல்கிறார்.
"எங்கே போய்விட்டாள்?" இது எனக்குள் எழுந்த கேள்வி. என் பார்வையிலிருந்து மறைந்துவிட்டாள். அவ்வளவு தான். அவள் குறைந்துவிட்டாளா? அழிந்துவிட்டாளா? இல்லை.
அவளைப் பொறுத்தவரை அவள் இக்கரையிலிருந்து கிளம்பிய போது, எவ்வளவு பெரிதாக இருந்தாளோ, அதே அளவு தான் இன்னும் இருக்கிறாள். அவள் குறைந்ததுபோல், ஒரு புள்ளியாய் மாறி, மறைந்தது போல் தெரிந்ததெல்லாம் என் பார்வையில் ஏற்பட்ட மாற்றங்களே தவிர, அவளிடம் ஏற்பட்ட மாற்றங்கள் அல்ல.
பார்வையிலிருந்து கப்பல் மறைந்ததும், "அதோ, அவள் போய்விட்டாள்." என்று அருகிலிருந்தவர் சோகத்துடன் சொன்ன அதே நேரம், வேறொரு கரையில் நிற்கும் இன்னொருவர் அவள் வருவதைக் கண்டு ஆனந்தத்தில் "இதோ அவள் வருகிறாள்." என்று சொல்லியிருப்பார். இதுதான் மரணம்.
 மறை போதகரும், கவிஞருமான Henry Van Dyke சொல்லியிருக்கும் அழகான எண்ணங்கள் இவை.







All the contents on this site are copyrighted ©.