2010-11-22 15:50:24

“அவள் வலியை எடுத்துச் செல்லுங்கள்”


நவ.22,2010. “ஒரு நாள் அவள் ஆடிப்பாடுவாள், அவள் கவலைகளை எடுத்துச் செல்லுங்கள், அவள் வலியை எடுத்துச் செல்லுங்கள், அவளை ஒரு புல்வெளியில் ஆடச் சொல்லுங்கள், அங்கே தன் தொலைந்த சிரிப்பை அவள் கண்டு பிடிப்பாள், மீண்டும் ஆடிப்பாடி ஓடி விளையாடுவாள், அவளது நாளையப் பொழுதில் விளக்கேற்றுங்கள், நீண்ட நாட்களாய் அவள் உறங்குகிறாள், அவள் கனவுகள் இருட்டில் புதைந்தன, அவளது வலியை எடுத்துச் செல்லுங்கள், அவள் இழந்த ஒளியைத் திரும்பக் கொடுங்கள், அவளையும் அழைத்துக் கொண்டு, ஒரு ஆற்றின் வழியாக பயணம் செல்லுங்கள். அங்கு வாத்துகளை நீந்த விடுங்கள், ஆட்டுக் குட்டிகளை மேய விடுங்கள், அவள் ஒரு குழந்தை, தூய்மையின் வடிவம், அவள் ஒன்பது வயதில் இருக்கும் போது "அவன்" திருடிச் சென்ற குழந்தையை அவளுக்குத் திரும்பக் கொடுங்கள்”.

இந்தக் கவிதை வரிகளை வலைத்தளத்தில் வாசித்த போது, வெறியர்களே, துள்ளித்திரிய வேண்டிய பருவத்தில் நீங்கள் கொடூரமாய்ப் பறித்த சின்னஞ்சிறுகளின் வாழ்வை மீண்டும் திருப்பிக் கொடுங்கள் என்று மனது கெஞ்சியது. அண்மையில் மும்பையில் என்கவுண்டர் ஸ்பெஸலிஸ்ட் என்று அழைக்கப்படும் காவல்துறை அதிகாரி ஒருவரே 15 வயதுச் சிறுமியை கற்பழித்திருக்கிறார். சேலம் மாவட்டம் பூலாம்பட்டி அருகே ஒன்பது வயது சிறுமி பழனியம்மாள், அதே பகுதியைச் சேர்ந்த 36 வயது ஆண் ஒருவரால் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டுள்ளாள். கோவையில் 11 வயது சிறுமி முஷ்தீன் கடத்திக் கொலை செய்யப்பட்ட விபரம் தமிழகத்தையே உலுக்கிய செய்தி.

உலகம் இன்று எவ்வளவோ மாறிவிட்டது. ஆனால் முக்கியமாக மாற வேண்டியவைகளில் மாறிவிட்டதா? இந்தக் கேள்விக்கு வெள்ளை உள்ளத்தோடு பதில் சொல்ல முடியவில்லை. குடும்பங்களிலும் சமூகங்களிலும் பணியிடங்களிலும் பல பெண்களும் சிறுமிகளும் உடலளவில், மனத்தளவில், பாலியல் ரீதியில், இன்னும் சுடும் சொற்களாலும் பலவிதமான வன்முறைகளை எதிர் கொள்கின்றனர். 1998ஆம் ஆண்டில் ருவாண்டா நாட்டுப் போர்க்காலக் குற்றம் குறித்து விசாரித்த ஐ.நா. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், கற்பழிப்பு போர்க்காலக் குற்றம் என அறிவித்தது. பெண்கள் எதிர்நோக்கும் இவ்வன்முறையைக் களையும் நோக்கத்தில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை 1993 ஆம் ஆண்டில் “பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான அனைத்துலக நாளை” அறிவித்தது. அதன்படி ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 25 ஆம் தேதி இவ்வுலக தினம் கடைபிடிக்கப்படுகிறது. இவ்வியாழன்ன்று கடைபிடிக்கப்படும் இந்நாளுக்கென செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், பெண்கள் எதிர்நோக்கும் கவுரவக் கொலைகள், பாலியல் வியாபாரம், பாலியல் வன்முறை ஆகியவற்றை அகற்ற ஊடகங்கள் தற்போது அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன, இவை மேலும் அதிகரிக்கப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறை பெருகும் பொது அது நலவாழ்வுப் பிரச்சனையாகவும் மனித உரிமை மீறலாகவும் இருக்கின்றது. இதனால் பெண்களுக்குக் கல்வி வாய்ப்பும் குறைபடுகின்றது. சமூகங்களிலும் அவர்கள் தரக்குறைவாய் நடத்தப்படுகின்றனர். நெருங்கிய உறவினரால் இவ்வன்செயல் அதிகமாக நடக்கின்றது என்று WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் கூறுகிறது. இந்நிறுவனம் பத்து நாடுகளில் பெண்களின் நலம் மற்றும் குடும்ப வன்முறை குறித்து எடுத்த ஆய்வில், 15 முதல் 71 விழுக்காட்டுப் பெண்கள் கணவன்களால் அல்லது கூடி வாழ்வோரால் வன்முறையை எதிர்கொள்கின்றனர். கர்ப்ப காலத்தில் 4 முதல் 12 விழுக்காட்டுப் பெண்கள் உடலளவில் துன்புறுத்தப்படுகின்றனர். குடும்பக் கவுரவம் என்ற பெயரில் உலகில் ஆண்டுதோறும் சுமார் ஐயாயிரம் பெண்கள் கொல்லப்படுகின்றனர். உலகில் ஐந்துக்கு ஒரு பெண் வீதம் குழந்தைப் பருவத்தில் பாலியல் வன்முறையை எதிர்நோக்கியிருக்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது.

சுமார் 15 வருடங்கள் வீட்டுக் காவலுக்குப் பின்னர் இம்மாதம் 13ம் தேதி விடுதலை செய்யப்பட்ட மியான்மார் ஜனநாயகப் புறா ஆங் சான் சூ கி, இச்சனிக்கிழமையன்று, ஓர் அமெரிக்க செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், தான் எந்த நேரத்திலும் மீண்டும் கைது செய்யப்படலாம் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். இந்த நொபெல் அமைதிப் புறா, யாங்கூனின் புறநகர் பகுதியில் சுமார் 80 எய்ட்ஸ் நோயாளிகள் தங்கியிருந்த இடத்துக்குச் சென்று அவர்களைச் சந்தித்தற்காக அந்நோயாளிகள் தாங்கள் தங்கியுள்ள வீடுகளை ஒரு வாரத்துக்குள் காலி செய்துவிட வேண்டுமென இராணுவ அரசு உத்தரவிட்டுள்ளதாகச் செய்தியில் வாசித்தோம்.

பாகிஸ்தானில் ஆசியா பீபி என்ற 45 வயதாகும் தாய் பற்றி இந்நாட்களில் பேசாத மேலை நாட்டு ஊடகங்களே இல்லை. ஐந்து குழந்தைகளுக்குத் தாயான ஆசியா பீபி செய்த பெருங்குற்றம்தான் என்ன? இவர், கடந்த ஆண்டு ஜூன் 19ம் தேதி முஸ்லீம் பெண்களுடன் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது சமயம் சார்பான பேச்சுத் தொடங்கியது. அப்போது அப்பெண்கள் "கிறிஸ்தவம், பிரமாணிக்கமற்றவர்களின் மதம்", "நீ பிரமாணிக்கமற்றவள்" என்று குறைகூறியதோடு இசுலாமைத் தழுவவும் ஆசியா பீபியை வற்புறுத்தியிருக்கின்றனர்.. உடனே அவர், தனக்குத் தெரிந்த குறைந்த அறிவை வைத்து கிறிஸ்தவத்தைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். கிறிஸ்து எங்களுக்காக உயிரைக் கொடுத்தார், உங்களது இறைவாக்கினர் என்ன செய்திருக்கிறார் என்று கேட்டிருக்கிறார். இதனால் அக்கிராமத்து முஸ்லீம் ஆண்கள் அவரைக் கடுமையாய் அடித்ததோடு அவரது குழந்தைகளையும் சித்ரவதை செய்துள்ளனர். காவல்துறையும் அவர்மீது FIR பதிவுசெய்து சிறையில் அடைத்தது. பாகிஸ்தான் வரலாற்றில் ஒரு பெண் மரணதண்டனைக்குத் தீர்ப்பிடப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். பாகிஸ்தானில் 1986 முதல் 2009 வரை "தேவநிந்தனை" சட்டத்தின்கீழ் குறைந்தது 974 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் உட்பட உலகின் பல தலைவர்கள் ஆசியா பீபி விடுதலை செய்யப்படுமாறு வருந்திக் கேட்டுள்ளனர். இஞ்ஞாயிறன்று இத்தாலியில் எல்லாக் கத்தோலிக்கப் பங்குகளும் உலகில் நசுக்கப்படும் கிறிஸ்தவர்களுக்காகச் செபித்தன. ஆசியா பீபிக்காகவும் செபித்தன. இதற்கிடையே இவரது மரணதண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இஞ்ஞாயிறன்று செய்திகள் வெளியாகியுள்ளன. எங்கள் நாட்டில் கலாச்சார ரீதியாக, சமூக ரீதியாகப் பெண்களுக்கு மதிப்பு கிடையாது இவர்கள் மிருகங்கள் போல் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்று பாகிஸ்தான் தாய்சேய் மருத்துவர் ஷாய் சொல்லியிருக்கிறார்.

ஈரானிலும் சக்கினா என்ற தாய்க்கு விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனை இரத்து செய்யப்படுமாறு மேலை நாடுகளில் குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன. தாய்லாந்தில் கருவிலேயே கொல்லப்பட்ட இரண்டாயிரம் சிசுக்களின் உடல்கள் பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்டுத் தகனம் செய்யப்படுவதற்காக பாங்காக்கில் உள்ள ஒரு புத்தர் கோவிலில் உள்ள சவக்கிடங்கில் ஓராண்டளவாக வைக்கப்பட்டு இருக்கின்றன. இக்குழந்தைகளின் ஆவிகளுக்காக அங்கு பால் ஊற்றப்பட்டு வாழைப்பழமும் வைக்கப்பட்டு இருந்ததாக இஞ்ஞாயிறன்று செய்தி வெளியாகியது. தாய்லாந்தில் கருக்கலைப்பு சட்டவிரோதமாகும். இருந்தும் விபச்சாரத் தொழிலே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகின்றது.

அன்பர்களே, பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புப் பற்றிப் பேசும் இந்நேரத்தில், சி என் என் அமெரிக்க ஊடகம், இவ்வாண்டின் தலைசிறந்த ஹீரோ அனுராதா கொய்ராலா என்று இஞ்ஞாயிறன்று அறிவித்துள்ளது. இவருக்கு ஒரு இலட்சம் டாலர் பரிசுத் தொகையும் கிடைத்துள்ளது. சுமார் இருபது இலட்சம் பேர் ஓட்டளித்து இவரைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். மதுரை நாரயணன் கிருஷ்ணன் உட்பட மற்ற 9 பேருக்கு தலா 25 ஆயிரம் டாலர் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. Maiti Nepal என்ற அமைப்பின் தலைவரான கொய்ராலா, நேபாளத்தில் பாலியல் வியாபாரத்திற்குப் பலியாகும் பெண்களில் 12 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு இதுவரை மறுவாழ்வு கொடுத்திருக்கிறார். நல்லவேலை வாங்கித் தருவதாக கிராமங்களிலிருந்து ஏமாற்றி அழைத்து வரப்படும் இச்சிறுமிகளும் பெண்களும் இந்திய-நேபாள எல்லையில் பாலியல் வியாபாரத்துக்காகக் கடத்தப்படுகின்றனர். அவ்விடத்திற்குச் சென்று பேருந்துகளில் இத்தகையப் பெண்களைத் தேடித் தனது அமைப்புக்கு அழைத்து வந்து மறுவாழ்வு கொடுத்து வருகிறார் கொய்ராலா. அங்கிருந்து தினமும் நான்கு அல்லது ஐந்து பெண்களை அழைத்து வருவதாகச் சொல்கிறார். நேபாளத்தில் இந்தப் பாலியல் வியாபாரத்திற்கு உண்மையிலேயே நிச்சயம் ஒருநாள் முடிவு கட்டுவோம் என்று உறுதிபடச் சொல்கிறார் கொய்ராலா.

இஞ்ஞாயிறன்று கடந்த நூற்றாண்டின் சக்தி வாய்ந்த 25 பெண்கள் பட்டியலை டைம் பத்தரிகை வெளியிட்டுள்ளது. அதில் இந்திரா காந்தியும், அன்னை தெரசாவும் இடம்பெற்றுள்ளனர். இத்தகைய சக்தி வாய்ந்த பெண்கள் வாழ்ந்த ஒரு நாட்டிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன. எனவே பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாளையொட்டி நாம் சமூகத்திடம் கேட்கிறோம். காமுகர்களின் பசிக்கு சின்னஞ்சிறுகள் தொடர்ந்து உணவாகிக் கொண்டே இருக்க அனுமதிக்கலாமா? அந்தச் சிறுமிகளின் வலியை எடுத்துச் சொல்லுங்கள். அவர்களின் வலியை அகற்ற நடவடிக்கை எடுங்கள். அவரவர் வலி அவரவர்க்கே என்று இறுமாந்து இருந்து விடாமல் இந்த வலி, எனது வலி என்று உணர்ந்து செயல்படுங்கள் என்று. இந்த வலியைச் சந்திக்கும் சிறுமிகளிடமும் பெண்களிடமும் சொல்கிறோம் : அமைதியாய் இரு! பணிவாக நடந்து கொள்! சட்டங்களை மதி! ஆனால், உன்னைத் தாக்க வருபவனைத் தகர்த்தெறி!, அவனைச் சட்டத்திடம் ஒப்படை”என்று.

எல்லாவற்றையும் துறந்த ஒரு முனிவரிடம் ஒரு கோவணம் மட்டுமே இருந்தது. உறங்கும் போது எலி அதனைக் கடித்துக் குதறி விட்டது. எனவே வேறு கோவணம் கொணர்ந்தார். அதையும் எலி கடித்துவிட பின்னர் நான்கைந்து கோவணங்களை வைத்திருந்தார். அவற்றையும் எலிகள் கடித்துவிட எலித் தொல்லை தீரப் பூனை வளர்த்தார். பூனைக்குப் பால் வேண்டுமே என்பதற்காக ஒரு பசுவை வளர்க்கத் தொடங்கினார். பசுவை பராமரிக்க ஆள் வேண்டுமே, அதற்காக ஒரு பணிப்பெண்ணை அமர்த்தினார். பின்னர் என்ன அந்த முனிவரின் இடம் பிள்ளைகளோடு மாளிகையானது.

இம்முனிவர் போல வாழ்க்கையில் பலர் ஏதோ ஓரிடத்தில் தவறு செய்து சறுக்கி விடுகின்றனர். அந்தச் சறுக்கலானது அவர்களைப் புறப்பட்ட இடத்திலேயே விட்டு விடுகிறது. புலன்களின் வழி, இச்சைகளின் வழி சென்றால் சறுக்கி விடுவது உறுதி. இவற்றின் வழியில் செயல்படுவதாலே பல சிறுமிகளும் பெண்களும் பல வன்கொடுமைகளைச் சந்திக்கின்றனர். எனவே இவர்கள் எதிர்கொள்ளும் வலிகளை அகற்ற முன்வருவோமா!

எவன் எவனை அழிக்கின்றானோ அவன் உலகத்தைத் தாங்கும் ஒரு கரத்தை இழக்கிறான். ஒருவனை அழிப்பது எளிது. ஆனால் அவனை நல்ல முறையில் வாழ வைப்பது மிகவும் கடினம்.








All the contents on this site are copyrighted ©.