2010-11-22 15:42:30

நவம்பர் 23 நாளும் ஒரு நல்லெண்ணம்


பனாமாக் கால்வாய் என்பது பசிபிக் பெருங்கடலையும் அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கும் செயற்கைக் கால்வாய் ஆகும். இது உலகிலே மிக நீண்ட கால மற்றும் கஷ்டமான தொழிற்நுட்பங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கால்வாய்களில் ஒன்றாகும். 1904ம் ஆண்டு முதல் 1914ம் ஆண்டு வரை இது கட்டப்பட்டது. இதனை அமைப்பதற்கான எண்ணம் 16ம் நூற்றாண்டில் ஆரம்பமானது. ஆயினும் 1880 இல் பிரான்சு தலைமையில் இக்கால்வாய் வெட்டும் பணி தொடங்கியது. ஆனால் அப்பணியில் 21,900 தொழிலாளர்கள் இறந்த பின்னர் இம்முயற்சி கைவிடப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் மலேரியா, மஞ்சள்காமாலை போன்ற நோய்களாலும் நிலச்சரிவுகளாலும் இறந்தனர். பின்னர் 1900களில் அமெரிக்க ஐக்கிய நாடு மீண்டும் இப்பணியைத் தொடங்கியது. இம்முயற்சியில் 5,600 பேர் இறந்தாலும் அக்கால்வாய் வெற்றிகரமாக 1914 இல் திறக்கப்பட்டது. இந்தப் பனாமாக் கால்வாய் 77 கிமீ நீளமானதாகும். 2008ம் ஆண்டில் மட்டும் 14,702 கப்பல்கள் இதனைக் கடந்து சென்றுள்ளன.

இதன் கட்டுமானப் பணியின் போது பல பணியாளர்கள் நீண்ட காலம் கஷ்டப்பட்டு வேலை செய்து அந்தக் கால்வாய்ப் பள்ளத்தைத் தோண்டி முடித்தார்கள். அப்பாடா வேலை முடிந்தது என்று அவர்கள் பெருமூச்சு விட்ட அந்த நேரத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அநதப் பள்ளத்தின் பெரும் பகுதியை மண்ணும் புழுதியும் மூடிவிட்டன. அப்போது அப்பணிக்குப் பொறுப்பான மனிதர், அதிபர் Goethals டம் ஓடோடிச் சென்று, “சர், பயங்கரமானது நடந்து விட்டது. எல்லா மண்ணும் மீண்டும் பள்ளத்தை மூடிவிட்டன. இப்பொழுது என்ன செய்வது?” என்று கேட்டார். அப்போது Goethals நிதானமாகச் சொன்னார் : “மீண்டும் தோண்டுங்கள். நாம் வேறு என்ன செய்ய முடியும்?” என்று.

முயற்சி திருவினையாக்கும்.







All the contents on this site are copyrighted ©.