2010-11-19 16:03:01

வத்திக்கானில் கர்தினால்கள் கூட்டம்


நவ.19,2010. இச்சனிக்கிழமை 24 பேர் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்படவுள்ளவேளை, இவ்வெள்ளியன்று வத்திக்கானில் கத்தோலிக்கத் திருச்சபையின் அனைத்துக் கர்தினால்களுடன் ஒரு நாள் செபம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

உலகின் மத சுதந்திரம், குருக்களின் தவறானப் பாலியல் நடவடிக்கை உட்பட பல விவகாரங்கள் குறித்து கலந்து பேசுவதற்காகத் திருத்தந்தை இக்கூட்டத்தைக் கூட்டியுள்ளார் என்று சொல்லப்பட்டது.

உலகில் மத சுதந்திரத்தின் நிலை குறித்தும், இன்றைய உலகம், குறிப்பாக, மத்திய கிழக்குப் பகுதி எதிர்கொள்ளும் புதிய சவால்கள் குறித்தும், இன்றையத் திருச்சபையின் வாழ்வில் திருவழிபாடு குறித்தும் இவ்வெள்ளி காலை அமர்வி்ல் கர்தினால்கள் விவாதித்தனர்.

இச்சனிக்கிழமை காலை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் கொழும்புப் பேராயர் மால்கம் இரஞ்சித் உட்பட 24 பேரைப் புதிதாகக் கர்தினால் நிலைக்கு உயர்த்துவார் திருத்தந்தை. அச்சமயத்தில் கர்தினால்கள் அணியும் சிவப்புத் தொப்பியை அவர்களுக்கு வழங்குவார்.

இஞ்ஞாயிறு காலை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் திருத்தந்தை நிகழ்த்தும் திருப்பலியில் புதிய கர்தினால்களுக்கு மோதிரத்தை அவர் அணிவிப்பார்.

தற்சமயம் திருச்சபையில் மொத்தக் கர்தினால்களின் எண்ணிக்கை 179. இவர்களில் புதிய பாப்பிறையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய எண்பது வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 101.

இச்சனிக்கிழமை நிகழ்வுக்குப் பின்னர் திருச்சபையில் மொத்தக் கர்தினால்களின் எண்ணிக்கை 203 ஆகவும் இவர்களில் எண்பது வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 121 ஆகவும் இருக்கும்.







All the contents on this site are copyrighted ©.