2010-11-19 16:07:39

ப்ரெஞ்ச் ஆயர்கள் : உலக முஸ்லீம்களுக்கு வாழ்த்துச் செய்தி


நவ.19,2010. உலக முஸ்லீம்கள் மெக்காவுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டு "Eid El Adha" என்ற தியாகத் திருவிழாவைக் கொண்டாடிய இவ்வேளையில், இவ்வுலகில் மனிதர் எல்லாரும் அமைதி, நீதி, அனைத்து மதத்தினரையும் மதித்தல் ஆகியவற்றில் வளர இறைவனிடம் செபிப்பதாக ப்ரெஞ்ச் ஆயர்கள் கூறியுள்ளனர்.

ப்ரெஞ்ச் ஆயர் பேரவையின் பல்சமய உறவுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆயர் Michel Santier, முஸ்லீம்களுடனான உறவுகளின் தேசிய அமைப்பின் இயக்குனர் அருள்திரு Christophe Roucou ஆகியோர் இணைந்து முஸ்லீம்களுக்கென வெளியிட்டுள்ள செய்தியில் இவ்விழாவுக்கானத் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாக்தாத் ஆலயத்தில் செபித்துக் கொண்டிருந்த குருக்களும் கிறிஸ்தவர்களும் கொல்லப்பட்ட பயங்கரவாதச் செயல் குறித்துக் கவலை தெரிவிக்கும் அச்செய்தி, கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கிடையேயான சகோதரத்துவ உறவு இயலாதது என்று நம்பும் மக்கள் இத்தாக்குதலை நியாயப்படுத்துவது போல் தெரிகின்றது என்று குறிப்பிட்டுள்ளது.

ஈராக்கின் பயங்கரவாதத் தாக்குதல்களில் எண்ணற்ற முஸ்லீம்களும் பலியாகின்றனர் என்றும் கூறும் அச்செய்தி, ஈராக்கில் எல்லாரும் அமைதியில் வாழ்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

மெக்காவுக்கு ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் ஹஜ் புனிதப் பயணத்தின் இறுதியில் Eid Al-Adha விழாக் கொண்டாடப்படுகிறது. இசுலாமில் முக்கிய விழாக்களில் ஒன்றான இவ்விழா இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.