2010-11-19 15:56:39

நவம்பர் 20. நாளும் ஒரு நல்லெண்ணம்


பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த

மக்கள்பேறு அல்ல பிற - -

ஒருவன் தான் பெறக்கூடிய செல்வங்களுள் சிறந்த செல்வம் நன்கு அறிய வேண்டியவைகளை அறிந்து கொள்ளும் ஆற்றலுள்ள குழந்தைகள் பெறல் ஆகும் என்று குறள் கூறுகின்றது.

மக்கள்மெய் தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர்

சொல்கேட்டல் இன்பம் செவிக்கு -

என்ற குறளில் தம் குழந்தைகளின் உடலினைத் தொடும் பொழுது பெற்றோர்க்கு இன்பம் உண்டாகும். அவர்களின் மழலைச் சொல் கொஞ்சும் மொழி கேட்டால் செவிக்கு இன்பம் உண்டாகும் என்கிறார் வள்ளுவர்.

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்

மழலைச் சொல் கேளாதவர். என்பவரும் வள்ளுவப் பெருந்தகையே.

பிழைகளின் கோர்வையே மழலை. குழந்தைகளில் மட்டும் தான் பிழைகளும் அழகாய்த் தெரியும், அதையும் ரசிக்க முடியும். மழலைச் சிரிப்புக்கு மயங்காதவர் எவருமுண்டோ?

இம்மாதம் 14ந் தேதி இந்திய குழந்தைகள் தினத்தைச் சிறப்பித்தோம்.

இச்சனியன்று அகில உலக குழந்தைகள் தினம் ஐநாவால் சிறப்பிக்கப்படுகின்றது.

நம் குழந்தைகள் மட்டுமல்ல, உலகின் அனைத்துக் குழந்தைகளும் சீரும் சிறப்புடன் வாழ இந்நாட்களில் இறைவனைச் சிறப்பான விதத்தில் வேண்டுவோம்.








All the contents on this site are copyrighted ©.