2010-11-18 15:19:28

அனைத்து மக்களுக்கும் சமமாகக் கிடைக்கக் கூடிய மருத்துவ வசதிகளைத் திருப்பீடம் விரும்புகிறது - பேராயர் Zygmunt Zimowski


நவ.18, 2010. திருத்தந்தை எழுதிய "Caritas in Veritate" என்ற திருமடலில் கூறப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில் மனிதநலம் காக்கப்பட வேண்டும் என்று பேராயர் Zygmunt Zimowski கூறினார்.

"Caritas in Veritate திருமடலின் ஒளியில் அனைவருக்கும் சமமான மனித நலம் நோக்கி" என்ற தலைப்பில் உரோமையில் இவ்வியாழனன்று இரண்டு நாள் கருத்தரங்கு ஆரம்பமாகியுள்ளது. இக்கருத்தரங்கில் திருப்பீடச் செயலர் கர்தினால் Tarcisio Bertone, நீதி மற்றும் அமைதிக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Peter Turkson ஆகியோர் உட்பட பல வத்திக்கான் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

அனைத்துலக மனித நலம் பேணுதலுக்கான இக்கருத்தரங்கைக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நலவாழ்வுக்கான திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Zimowski, செல்வம் மிகுந்த நாடுகளில் நிலவும் நலவாழ்வு வசதிகளும், ஏழை நாடுகளில் உள்ள வசதிகளும் வேதனை தரும் வகையில் வேறுபட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

ஏழைகளுக்கும், புலம்பெயர்ந்தோருக்கும் மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதென்பதை சுட்டிக்காட்டிய பேராயர் Zimowski, அனைத்து மக்களுக்கும் சமமாகக் கிடைக்கக் கூடிய மருத்துவ வசதிகளை இக்கருத்தரங்கு ஆராயவுள்ளதென்று கூறினார்.

மருத்துவ உலகில் நிலவி வரும் பல்வேறு மாறுபட்ட கருத்துக்களின் மத்தியில், மீண்டும் மனிதர்களை மையப்படுத்திய மருத்துவ உலகை உருவாக்குவதும், உயிரியல் நன்னெறிகளை வலியுறுத்துவதும் இக்கருத்தரங்கின் நோக்கம் என்று பேராசிரியர் Domenico Adruni கூறினார்.








All the contents on this site are copyrighted ©.