2010-11-17 15:28:14

நவம்பர் 18 – நாளும் ஒரு நல்லெண்ணம்


உலர்வு ஒவ்வொன்றும் உதிர்வின் முன் அடையாளம்.

மலர்வது எல்லாம் ஒரு நாள் உலர்ந்து போகும், உதிர்ந்து போகும், மறைந்து போகும் என்பது முதலிலேயே தீர்மானிக்கப்பட்டதாயினும், அந்த இடைவெளிக்குள் அந்த உண்மையை மறந்துபோக வைக்கும் எத்தனை முயற்சிகள்!. ஒரு மலரின் உதிர்வு என்பது ஒரு மலையின் சரிவாகக்கூட ஆகலாம். அது அம்மலர் ஏற்படுத்தும் இழப்பின் பாதிப்பைப் பொறுத்தது.

நவம்பர் மாதமானது கத்தோலிக்கர்களுக்கு மீண்டும் மீண்டும், நம் வாழ்விலிருந்து மறைந்து போனவர்களின், மரித்துப் போனவர்களின் நினைவுகளையேத் தந்து கொண்டிருக்கிறது. அன்று அன்பில் வாழ்ந்த காலங்கள் கண் முன் நிழலாடிக்கொண்டே இருக்கின்றன. பிறந்து விட்டதற்காகவே வாழ்ந்து முடிந்துவிட்டுப் போனவர்களைப்பற்றி நாம் இங்கு பேச வரவில்லை. கடந்த கால இழப்புகளை எண்ணி கரையச் சொல்ல வரவில்லை. மரணத்தைப்பற்றி அதிகம் அதிகமாக புரிந்து கொள்ள இது சிறந்ததொரு காலம் என்பதைத்தான் சுட்டிக்காட்ட வருகிறோம். இலவங்காய் வெடித்துச் சிதறி பஞ்சாய் பறந்தால், அது மரணமா?

மழைத்துளி ஒன்று மண்ணில் விழுந்து உறிஞ்சப்பட்டால், அது மரணத்தின் அடையாளமா?

முதிர்ந்து சிவந்து மண்ணில் விழும் பழத்திற்கு நிகழ்வது மரணமா?

சிந்தித்து பார்த்தால், அவையெல்லாம் இயல்பு அல்லது வாழ்க்கை மாற்றம் என்பது புரியும். அதையொத்ததுதான் மனிதனின் இவ்வுலக வாழ்வின் இறுதியும்.

அவ்வப்போது மரணத்தையும் நினைத்துக் கொள்வோம்.

மரணத்தை நினைத்துக்கொண்டே மனிதனாய் வாழ்ந்தால்தான், நம் மரணத்தின் போதும் நம் மனிதம் நினைவு கூரப்படும்.








All the contents on this site are copyrighted ©.