2010-11-17 15:26:54

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


நவ 17, 2010. குளிர்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் குளிரும், மழை அவ்வப்போது பெய்வதால் குளிரின் குறைவும், என வானிலை வழக்கத்திற்கு மாறாக மாறி மாறி வந்து கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் இப்புதனானது மழையின்றி ஒளிமயமான வானத்துடன் இருந்தது. இப்புதனன்று மழைக்கான வாய்ப்புகள் இல்லை என முதலிலேயேத் தெரிந்ததால், திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகத்திற்கான ஏற்பாடுகள் உரோம் நகரின் புனித இராயப்பர் பசிலிக்காப் பேராலய வளாகத்திலேயே செய்யப்பட்டிருந்தன. பல ஆயிரக்கணக்கில் திருப்பயணிகளும் சுற்றுலாப்பயணிகளும் குழுமியிருக்க, Cornillon ன் புனித ஜூலியானா குறித்து இவ்வார புதன் பொது மறைபோதகத்தை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். Cornillon ன் புனித ஜூலியானா Liège ன் புனித ஜூலியானா என்றே அதிகம் அதிகமாக அறியப்பட்டுள்ளார். 12ம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்து இளவயதிலேயே அனாதையான இப்புனிதை, அகுஸ்தினார் துறவு சபையில் இணைந்து துறவியானார். நல்லறிவையும் நன்னடவடிக்கைகளையும் கொண்ட இவர், திருநற்கருணை எனும் திருவருட்சாதனத்தின் மீதான பக்தியாலும், ஆழ்ந்த தியான முறையிலான ஜெபத்தாலும் மிகவும் கவரப்பட்டார். தொடர்ந்து இவர் கண்ட காட்சிகளின் விளைவாக, திருநற்கருணை மீதான பக்திமுறையைக் கௌரவிக்கும் விதமாக, திருவழிபாட்டு திருவிழா ஒன்றை ஊக்குவிக்க உழைத்தார் புனித ஜூலியானா. கிறிஸ்துவின் திரு உடல் திருவிழா முதலில் Liège மறைமாவட்டத்திலேயே கொண்டாடப்பட்டு, பின்னர் அங்கிருந்து வேறு இடங்களுக்குப் பரவியது. Liège நகரில் புனித ஜூலியானாவை தெரிந்திருந்த திருத்தந்தை நான்காம் உர்பான், அகில உலக திருச்சபைக்கான கிறிஸ்துவின் திரு உடல் திருவிழாவை உருவாக்கியதோடு, அத்திருவழிபாட்டுச் சடங்குகளுக்கான ஏட்டைத் தயாரிக்கும்படி புனித தாமஸ் அக்குவினாஸைப் பணித்தார். இத்திருத்தந்தையே இப்பெருவிழாவை, அப்போது திருத்தந்தையின் அவையின் இருப்பிடமாக இருந்த இத்தாலியின் ஓர்வியெத்தோ நகரில் சிறப்பித்தார். அதற்கு முந்தைய ஆண்டில்தான் இங்கு திருநற்கருணை புதுமையானது இடம்பெற்றது, மற்றும் அங்குதான் புதுமை நிகழ்ந்த திருநற்கருணை போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது. Cornillon ன் புனித ஜூலியானாவை நினைவுகூரும் இவ்வேளையில், திருநற்கருணையில் கிறிஸ்து, உண்மையாகவே பிரசன்னமாகியிருப்பது குறித்த நம் விசுவாசத்தைப் புதுப்பிப்போம். மேலும், இன்று நாம் திருச்சபையில் காணும் 'திருநற்கருணையின் வசந்தம்', கிறிஸ்துவின் உடல் மற்றும் இரத்தம் எனும் திருவருட்சாதனத்தின் மீதான பக்தியை மேலும் மேலும் அதிகரிக்கும் பலனை வழங்க வேண்டும் என ஜெபிப்போம். இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.