2010-11-16 15:35:10

விவிலியத் தேடல்


RealAudioMP3
திருப்பாடல் 23ன் நான்காம் திருவசனத்தில் இன்று நாம் அடியெடுத்து வைக்கிறோம். நவம்பர் மாதத்தில் நாம் இதுவரை பகிர்ந்து வந்துள்ள விவிலியத் தேடல் மற்றும் ஞாயிறு சிந்தனை பகுதிகளில் நமது வாழ்வு ஒரு பயணம், இப்பயணத்தின் இறுதியில் வருவது மரணம். மரணம் மறுவாழ்வைத் திறக்கும் கதவு... என்று சிந்தித்து வந்துள்ளோம். இன்று மீண்டும் வாழ்வின் முடிவைப் பற்றி சிந்திக்க திருப்பாடல் 23ன் வரிகள் வழியாக ஒரு வாய்ப்பு நமக்குத் தரப்பட்டுள்ளது.
சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால், எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.” 
சாவு, மரணம் என்று யாராவது பேச ஆரம்பித்தால், "வேறு ஏதாவது நல்லவைகளைப் பற்றி பேசுவோமே" என்பது தான் நமது முதல் எண்ணம், முதல் பதில். சாவு, மரணம் என்பவை ஏதோ நல்லவைகள் இல்லாத, அமங்கலமான சொற்கள், எண்ணங்கள் என்பது நம் கணிப்பு. ஆனால், சாவு, மரணம் இவைகளையும் நல்லதொரு கோணத்திலிருந்து பார்த்தால், அந்தப் பார்வை நமது வாழ்வைக் குறித்து பல தெளிவுகளை உண்டாக்கும்.

நாமோ, அல்லது நமக்கு நெருங்கிய ஒருவரோ ஒர் இறுதி நிலைக்கு வந்துவிடும் நேரங்களில் தாம் நாம் பெரும்பாலும் மரணத்தைப் பற்றி நினைக்கிறோம். அந்த நேரங்களில் மனதில் பயம், கலக்கம் போன்ற உணர்வுகளே அதிகம் உண்டாகும். நல்ல உடல் நிலையுடன் இருக்கும் போது, எந்த வித படபடப்பும் இல்லாமல் மரணத்தைப் பற்றி ஏன் நாம் நினைத்துப் பார்ப்பதில்லை? மரணம் என்ற ஓர் எல்லைக்கு உட்பட்டதுதான் வாழ்க்கை என்பதை உணராமல், வாழ்வைப் பற்றிய ஒரு முழுமையான எண்ணத்தை எப்படி பெற முடியும்? இந்த எண்ணங்களைக் கூறுவது Studs Terkel என்ற அமெரிக்க எழுத்தாளர்.

Studs Terkel 2001ம் ஆண்டு எழுதிய ஒரு நூலின் தலைப்பு: Will the Circle be Unbroken? Reflections on Death, Rebirth and Hunger for a Faith”. இந்த வட்டம் உடையாமல் இருக்குமா? - மரணம், மறுவாழ்வு, மறு ஜென்மம், விசுவாசம் பற்றிய சிந்தனைகள். 2001ம் ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டு. பலர் இந்த உலகம் அழியப் போகிறதென்று எதிர்பார்த்த ஓர் ஆண்டு. வேறு பலர் இந்த உலகம் புதியதொரு யுகத்தை ஆரம்பித்துள்ளதென்று கூறிவந்த ஆண்டு. அந்த ஆண்டு செப்டம்பர் 11 நடந்த நிகழ்வு  உலகில், சிறப்பாக அமெரிக்காவில், பலருக்கும் வாழ்வின் ஒரு முக்கியமான உண்மையைச் சிந்திக்க வைத்தது. நியூயார்க்கில் இருந்த இரு வர்த்தகக் கோபுரங்கள் தாக்கப்பட்டு, ஏறக்குறைய 3000 பேர் கொல்லப்பட்டனர். இந்த அழிவு பட்டப் பகலில் நடந்ததால், பல வீடியோ காமிராக்களில் பதிவு செய்யப்பட்டு உலகெங்கும் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. எனவே, மிக ஆழமான தாக்கங்களை மக்கள் மனதில் உண்டாக்கிச் சென்றது. மனித வாழ்வில் தவிர்க்க முடியாத மரணத்தைப் பற்றி பல சிந்தனைகளை உருவாக்கிச் சென்றது. இப்படி எழுந்த பல சிந்தனைகள் புத்தக வடிவில் வெளிவந்தன. திருப்பாடல் 23ன் விவிலியத் தேடல்களில் நாம் அடிக்கடி குறிப்பிட்டு வரும் Harold Kushnerன் ஆண்டவர் என் ஆயன் என்ற புத்தகமும் இந்த நிகழ்வின் பின்னணியில் எழுந்ததென அதன் ஆசிரியர் சொல்லியிருக்கிறார். இப்படி வெளிவந்த புத்தகங்களில் ஒன்றுதான் Studs Terkel எழுதிய இந்த வட்டம் உடையாமல் இருக்குமா? என்ற இந்தப் புத்தகம். 400 பக்கங்களுக்கு மேல் கொண்ட இப்புத்தகத்தில் 63 பேரின் எண்ணங்கள் பதியப்பட்டுள்ளன. மரணம், மறுவாழ்வு, மறுஜென்மம், விசுவாசம் என்ற பல எண்ணங்கள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

"எனக்கு அறுபது வயதாகிறது. அண்மையில்தான் நான் என் உயிலை எழுதி, பதிவு செய்தேன். நிம்மதியாக இருக்கிறது. நான் தீயணைப்புத் துறையில் பணி செய்ததனால், வாழ்வு, சாவு என்ற எண்ணங்கள் அடிக்கடி எனக்கு எழுந்ததுண்டு. இத்துறையில் பணி செய்த காலத்தில் வாழ்வின் மீது அதிகப் பிடிப்புடன் வாழ்ந்திருக்கிறேன். நெருப்புக்குள் நுழைந்து... அங்கு மரண பயத்துடன் காத்திருந்த மக்களைக் கண்டபோது, அவர்களைக் காப்பாற்றிய போது, நான் அதிகம் வாழ்ந்ததாய் உணர்ந்திருக்கிறேன்." 
தீயணைப்புத் துறையில் பணி புரிந்த Tom Gates என்பவரின் இந்தக் கூற்றுடன் ஆரம்பமாகிறது இந்த வட்டம் உடையாமல் இருக்குமா? என்ற இந்த நூல். மருத்துவர்கள், மதகுருக்கள், மரண தண்டனை பெற்று விடுதலை பெற்ற ஒருவர், Hiroshima அணுகுண்டு அழிவிலிருந்து தப்பித்த ஒருவர், துப்புரவுத் தொழிலாளி என்று வாழ்வின் பல நிலைகளில் உள்ள 63 பேர் மரணத்தை, மறு வாழ்வைப் பற்றி சொல்லியுள்ள எண்ணங்கள் இப்புத்தகத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

இந்நூலில் Father Leonard Dubi என்ற கத்தோலிக்கக் குருவின் உரையாடலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மரணம் குறித்து அவர் பேசுகையில், மரணம் என்ற எண்ணம் எனக்குப் பயமளிக்கவில்லை. ஆனால் மரணிப்பது என்பது, சாவது என்பது பயத்தை உண்டாக்குகிறது. மற்றவர்கள் இறப்பதைப் பார்த்திருக்கிறேன். அத்தனை பேர் சூழ்ந்து நின்றாலும், அந்த இறுதிப் போராட்டம் ஒவ்வொருவரும் தனியே மேற்கொள்ளும் போராட்டம் என்பதை எண்ணும்போது பயம் ஏற்படுகிறது என்று கூறுகிறார்.
“சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்…” என்று திருப்பாடலின் ஆசரியர் கூறியுள்ளது இதுதானோ? அந்த இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் இறுதியில் நாம் ஒவ்வொருவரும் தனியேதான் நடந்து செல்ல வேண்டும். இந்த இருளை, தனிமையை நாம் எப்படி சந்திக்கப் போகிறோம் என்பது மரணத்தைப் பற்றிய பல பயங்களை, தயக்கங்களை நமக்குத் தெளிவுபடுத்தும்.

மரணத்தை ஒவ்வொருவரும் கட்டாயம் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் மூவகை உணர்வுகளை வளர்க்கலாம். ஒரு நாள் சாகத்தான் போகிறோம். அதனால், உண்போம், குடிப்போம், எப்படியும் வாழ்வோம்... என்று சுயநலத்தைத் தூண்டி விடும் உணர்வு ஒரு வகை. விளம்பர, வியாபார உலகம் இந்த உணர்வுகளைத் தூண்டி விட்டு இலாபம் சம்பாதிக்கின்றன.
என்னதான் நல்லவைகளைச் செய்தாலும், எல்லாமே ஒரு நாள் அழியத்தான் போகிறது... பின் ஏன் நல்லவைகளைச் செய்ய வேண்டும் என்ற விரக்தி உணர்வு இரண்டாவது வகை. சிறுவன் ஒருவன் தன் வீட்டுப்பாடங்களைச் செய்ய மறுக்கிறான். அப்பா ஏன் என்று காரணம் கேட்கிறார். “ஓ, இன்னும் அறுபது கோடி ஆண்டுகளில் உலகம் அழியத் தான் போகிறது... பின் எதற்கு நான் வீட்டுப்பாடங்கள் செய்யவேண்டும்?” என்று பதில் கேள்வி கேட்கிறான் சிறுவன். எல்லாமே அழியும் என்பதால், நல்லவைகள் செய்வதை மறுப்பது இரண்டாம் வகை உணர்வு.
இதற்கு நேர் மாறாக, எல்லாமே அழியத் தான் போகிறது... அதற்கு முன் உள்ள நேரத்தில் என்னால் முடிந்த வரை நல்லது செய்வேன் என்பது நம்பிக்கையை வளர்க்கும் மூன்றாம் வகை உணர்வு. இந்த நம்பிக்கை உணர்வை வெளிப்படுத்தும் விதத்தில் திருப்பாடலின் ஆசிரியர் இவ்வரிகளைக் கூறுகிறார்.

Father Leonard Dubi சொன்னது போல், மரணத்தைச் சந்திக்க நமக்குள்ள பெரும் தடை, தனிமை என்ற பயம். விரைவாக, இயந்தர கதியில் செல்லும் இன்றைய உலகில் தனிமை பலரையும் பாதிப்பது உண்மை. இன்றைய உலகில் நிலவும் தனிமையை மிகைப்படுத்தி, பெரிது படுத்தி, பல நேரங்களில் பெருமைப்படுத்தி பல பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. சிறப்பாக, இளையோர் விரும்பும் வகையில் Jazz அல்லது Rock இசையில் வெளிவந்துள்ள இந்தப் பாடல்கள், தனிமையிலிருந்து நாம் தப்பிக்க முடியாது என்ற ஆழமான உணர்வை ஏற்படுத்தும் பாடல்கள். இந்தப் பாடல்களில் ஒரு சில, இந்தத் தனிமையை நீக்க சொல்லித் தரும் தீர்வு... போதைப் பொருட்கள். பல இளையோர் இந்தப் பாடல்களால் உந்தப்பட்டு, போதை வழியில் தங்கள் வாழ்வைத் தொலைத்திருப்பதும், பல இளையோர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதும் கசப்பான ஓர் உண்மை.

தனிமை உணர்வை மிகைப்படுத்தும் நெருடலான வரிகளை இந்த வட்டம் உடையாமல் இருக்குமா? என்ற புத்தகத்தின் துவக்கத்தில் மேற்கோள் காட்டியுள்ளார் Studs Terkel. அப்பாடலின் வரிகள் இவைதாம்:You’ve got to cross that lonesome valley,
You’ve got to cross it by yourself,
There ain’t no one can cross it for you,You’ve got to cross it by yourself.
-as sung by Richard Dyer-Bennett

தனிமை நிறைந்த அந்தப் பள்ளத்தாக்கினை நீ தனியேதான் கடக்க வேண்டும்.
உனக்காக இந்தப் பள்ளத்தாக்கினை வேறு யாரும் கடக்க முடியாது.
நீ மட்டுமே அதைத் தனியே கடந்தே ஆக வேண்டும். 
ஆனால், திருப்பாடல் 23ன் 4ம் திருவசனம் சொல்வது இதற்கு நேர்மாறான, நம்பிக்கை தரும் எண்ணங்கள்...
சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால், எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.இறைவனின் துணை எப்போதும் இருக்கும், முக்கியமாக, சாவின் இருள் சூழும் போது இறைவனின் துணை என்னுடன் இருக்கும். இந்த நம்பிக்கை சாவின் இருள் சூழ் பள்ளத்தாக்கில் மட்டுமல்ல. வாழ்வின் பாதையிலும் நம்மை வழி நடத்த ஆயனாம் இறைவனை வேண்டுவோம்.







All the contents on this site are copyrighted ©.