2010-11-16 15:34:43

நவம்பர் 17 நாளுமொரு நல்லெண்ணம்


நவம்பர் 17 - அனைத்துலக மாணவர் நாள்.
1939ம் ஆண்டு செக் நாட்டில் Prague பல்கலைக் கழகத்தில் நாசி ஜெர்மனியின் இராணுவம் நுழைந்தது. நாசி அராஜகத்திற்கு எதிராக போராடி வந்த மாணவர் தலைவர்கள், ஆசிரியர்கள் 9 பேரை நவம்பர் 17ம் தேதி தூக்கிலிட்டுக் கொன்றது. செக் நாட்டில் அனைத்து பல்கலைக் கழகங்களும் மூடப்பட்டன. 1200க்கும் அதிகமான மாணவர்கள் வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்த நிகழ்வின் நினைவை மனதில் பதிக்க அனைத்துலக மாணவர் நாள் உருவாக்கப்பட்டது.
மாண்புடையவர்கள் மாணவர்கள். மாணவர்கள் நினைத்தால், எதுவும் நடக்கும் என்று நாம் சொல்லி வருகிறோம். அவர்கள் நினைத்ததால், மாண்பு நிறைந்த, மகத்தான செயல்கள் வரலாற்றில் நிகழ்ந்துள்ளன. அதே நேரம், வரலாற்றைப் புண்படுத்திய செயல்களிலும் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.மாண்பை நிலைநிறுத்தும் செயல்களில் மாணவர்களாகிய நாம் அனைவரும் ஈடுபட வேண்டும். ஆம், நாம் அனைவரும் மாணவர்களே... மாணவப் பருவம் பள்ளி, கல்லூரியுடன் முடிவடைவதில்லை. உலகென்ற பள்ளியில் தினமும் பாடங்கள் பயின்று வரும் மாணவர்களாகிய நாம் நினைத்தால், எதுவும் நடக்கும். மாண்பு நிறைந்தவைகளை நினைப்போம், நடத்துவோம்.







All the contents on this site are copyrighted ©.