2010-11-15 15:00:57

வாழ்விற்கான பாதுகாப்பிற்கும் நன்றிக்கும் என திருவிழிப்பு ஜெப வழிபாடு.


நவ 15, 2010. இம்மாதம் 27ந்தேதி சனிக்கிழமை உலகின் அனைத்துப் பங்குத்தளங்களிலும், துறவுச் சபைகளிலும், கத்தோலிக்க இயக்கங்கள் மற்றும் நிறுவனங்களிலும் வாழ்விற்கானத் திருவிழிப்பு செப வழிபாடு நடத்தப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இஞ்ஞாயிறு மூவேளை ஜெப உரையின்போது இவ்வழைப்பை முன் வைத்த பாப்பிறை, கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு தயாரிப்பாக இடம்பெற உள்ள திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறுக்கு முந்தைய நாளான நவம்பர் 27ந்தேதி சனியன்று, இவ்வுலகின் மனித உயிர்களின் பாதுகாப்புக்காக இறைவனை இறைஞ்சுவதும், வாழ்வு எனும் கொடைக்காக இறைவனுக்கு நன்றிச் சொல்வதும் பொருத்தமானதே என்றார்.

இம்மூவேளை ஜெப உரையின்போது, ஹெய்ட்டி நாட்டில் காலரா நோயால் துன்புறும் மக்களுடன் தன் அருகாமையையும் ஒருமைப்பாட்டையும் அறிவிப்பதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை.

ஹெய்ட்டி நாட்டில் இன்னலுறும் மக்களைச் செபங்களில் சிறப்பான விதத்தில் நினைவு கூறும் அதேவேளை, சர்வதேச சமூகத்தின் தாராள உதவிகளுக்கு அழைப்பு விடுத்தார் பாப்பிறை.

இத்தாலியில் இஞ்ஞாயிறானது நன்றியறிவிப்பின் நாளாகச் சிறப்பிக்கப்பட்டது பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, உலகப்பொருளாதாரத்தில் விவசாயம் தனக்குரிய இடத்தை மீண்டும் அடைய உதவும் வண்ணம் விவசாயம் மறுமதிப்பீடு செய்யப்படவேண்டிய நேரம் இது எனவும் கூறினார்.

வருங்காலத்திற்கான முக்கிய ஆதாரமாக இருக்கும் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படாதத் திட்டங்களால் சுற்றுச்சூழலுக்கும் ஏழைகளுக்கும் கடுமையான பாதிப்புக்கள் ஏற்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டினார் பாப்பிறை.








All the contents on this site are copyrighted ©.