2010-11-15 15:31:21

ஆங் சான் சூ கி விடுதலை செய்யப்பட்டது ஒரு நம்பிக்கை நிகழ்ச்சி - ஆசியாவின் பல்வேறு மதத் தலைவர்கள்


நவ.15, 2010. மியான்மாரில் ஆங் சான் சூ கி இச்சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டதை அந்நாடு மக்களாட்சியை நோக்கிச் செல்லும் ஒரு நம்பிக்கை நிகழ்ச்சியாகச் சுட்டிக் காட்டியுள்ளனர் ஆசியாவின் பல்வேறு மதத் தலைவர்கள்.

மியான்மாரில் உள்ள Mandalay பகுதியைச் சார்ந்த ஒரு கத்தோலிக்க குரு UCAN செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், சூ கி தங்கள் நாட்டின் மக்களாட்சிக்கான ஓர் அடையாளம் என்றும், இவரது அரசியல் ஈடுபாட்டால், தங்கள் நாடு அகில உலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளதென்றும் கூறினார்.

இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் சார்பில் பேசிய அருள்தந்தை பாபு ஜோசப், ஆங் சான் சூ கி குறித்து அகில உலகில் எழுப்பப்பட்ட நெருக்கடிகளால் இந்த விடுதலை கிடைத்துள்ளதெனவும், தொடர்ந்து, அவருக்குள்ள மக்கள் ஆதரவால் அந்நாடு மக்களாட்சியைக் காணும் வாய்ப்புக்கள் அதிகம் என்றும் கூறினார்.

மக்களாட்சியை நிலைநிறுத்த அகிம்சை வழியில் மேற்கொள்ளப்பட்டுள்ள போராட்டத்திற்குக் கிடைத்த ஒரு வெற்றி, சூ கி யின் விடுதலை என்று இந்தியாவின் சமுக சீர்திருத்தவாதியான Agnivesh கூறியுள்ளார்.

அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பின் செயலர் ஜான் தயாள், பிரித்தானியாவில் உள்ள கிறிஸ்தவ ஒருங்கிணைப்பு அமைப்பின் பிரதிநிதி Mike MacLachlan ஆகியோர் ஆங் சான் சூ கியின் விடுதலை குறித்து தங்கள் மகிழ்வைத் தெரிவித்துள்ள அதே வேளை, அந்நாட்டில் இன்னும் சிறைக் காவலில் உள்ள 2100 அரசியல் கைதிகளும் விடுதலை பெற வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.