2010-11-12 12:00:14

நவம்பர் 13. நாளும் ஒரு நல்லெண்ணம்


கடந்த காலத்தில் நமது வாழ்வில் நிகழ்ந்த துயரமான சம்பவங்களை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து வருந்துவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

நஷ்டங்கள், இழப்புக்கள், ஏமாற்றங்கள், அவமதிப்புகள், மறைவுகள் என எல்லாருக்கும் பொதுவான விடயங்கள் நிறையவே உள்ளன.

இந்த விடயங்கள் எல்லாம் நமக்கு ஓர் படிப்பினையாக, ஒரு அனுபவமாக இருந்தால் மட்டுமே போதுமானது. மாறாக, நினைத்து நினைத்து வருந்துவது, கவலைப்படுவது என்பது நமது மனம் நிகழ்காலத்தில் இயங்குவதைத் தடுத்து, இறந்தகாலத்தில் சஞ்சரிக்கும் நிலையையே ஏற்படுத்தும்.

இதன் விளைவாக, இனிமேல் நடக்க வேண்டிய செயலில் நம் கவனம் சிதறும். நமது செயல்வேகம் குறையும். இன்னும் நட்டம், இழப்பு ஏற்படும்.

மனம் இன்னும் பலவீனமடையும். அதுவே உடல் நோயாக மாறிவிடும். மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பு அப்படி.

நடந்து முடிந்த ஒரு செயலை யாராலும் மாற்ற முடியாது. என்ன வருத்தப்பட்டாலும் நடந்தது நடந்ததுதான். போனது போனதுதான். அதிலிருந்து வெளியே வந்தால் ஒழிய அடுத்த கட்டத்திற்கு நம்மால் முன்னேற முடியாது.

கடந்த காலம் குறித்த கவலைகள், எதிர்காலம் குறித்த அச்சத்தைக் கொணர்ந்து விடும். எதிர்காலம் குறித்து அச்சம் கொள்வதும், அவநம்பிக்கை கொள்வதும் மனதிற்குள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் எண்ணங்களை எண்ணுவோம், செயல்களைச் செய்வோம், நல்ல விளைவுகளை அனுபவிப்போம். இதுவே நம் நம்பிக்கை. இதுவே வாழ்க்கைக் கணிதம், இதுவே வாழ்க்கை அறிவியல்.








All the contents on this site are copyrighted ©.