2010-11-12 15:02:20

ஈரான் அரசுத்தலைவருக்குத் திருத்தந்தை கடிதம்


நவ.12,2010. மனித உரிமைகளை மதிப்பது, அமைதியைக் கட்டி எழுப்புவதற்கு "இன்றியமையாதக் கூறு" என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

ஈரானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran வழியாக, ஈரான் அரசுத்தலைவர் Mahmoud Ahmadinejad க்கு அனுப்பிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

நீதியான சமூக அமைப்பையும் அமைதியையும் கட்டி எழுப்புவதற்கு மனிதனின் மிக உன்னத மாண்பை மதிப்பது மிகவும் அவசியம் என்பதில் தனக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்று அதில் கூறியுள்ளார் திருத்தந்தை.

உண்மையில், ஒருவர் இறைவனோடு கொண்டுள்ள உறவு, ஒவ்வொரு மனிதனின் தவிர்க்க முடியாத மாண்பு மற்றும் அவனது வாழ்வின் புனிதத்தன்மைக்கு அறுதி அடித்தளமாக இருக்கின்றது என்றும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமைதி, எல்லாவற்றிற்கும் மேலாக, இறைவனின் மேலான கொடை என்றும் அதனைச் செபத்தின் வழியே நாட வேண்டும், அதேநேரம் அது நன்மனம் கொண்ட மனிதரின் முயற்சியின் பயனாகவும் இருக்கின்றது என்றும் திருத்தந்தை அதில் கூறியுள்ளார்.

ஈரான் அரசுத் தலைவர் Ahmadinejad ஐ இச்செவ்வாயன்று சந்தித்து திருத்தந்தையின் இக்கடிதத்தைக் கொடுத்துள்ளார் கர்தினால் தவ்ரான்.







All the contents on this site are copyrighted ©.