2010-11-12 15:04:10

இலங்கை சூதாட்டச் சட்டத்திற்குச் சமயத் தலைவர்கள் எதிர்ப்பு


நவ.12,2010. இலங்கை நாடாளுமன்றம் இவ்வாரத்தில் நிறைவேற்றியுள்ள சூதாட்டம் குறித்தப் புதியச் சட்டத்திற்கு அந்நாட்டுச் சமயத் தலைவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இலங்கையின் சமயத் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வந்த கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இப்புதியச் சட்டம் குறித்துப் பேசிய கொழும்புப் பேராயர் மால்கம் இரஞ்சித், சூதாட்டம் அனைத்துச் சமயக் கோட்பாடுகளுக்கும் எதிரானது என்று கூறினார்.

சமய மதிப்பீடுகள் மிகவும் முக்கியத்துவம் பெற்ற ஒரு நாட்டில் இத்தகையச் சட்டம் அடிப்படை மத விழுமியங்களுக்கு எதிராகச் செல்லாது என்பதற்கு உறுதி வழங்கப்பட வேண்டும் என்றும் இலங்கை ஆயர் பேரவைத் தலைவரான பேராயர் இரஞ்சித் தெரிவித்தார்.

புத்தமதத் தலைவர்களும் இதேமாதிரியான உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

இலங்கை நாடாளுமன்றம் இந்த நவம்பர் 10ம் தேதி நிறைவேற்றியுள்ள சூதாட்டம் குறித்தப் புதியச் சட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளில் சூதாட்டம் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இனிமேல் உரிய அரச அனுமதி இல்லாமல் யாராவது சூதாட்ட விடுதிகள் நடத்தினால் பெரும் அபராதத்தொகை கட்டவேண்டிவரும் என்பதோடு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையையும் அனுபவிக்க வேண்டி வரும்.

இலங்கை அரசு அடுத்த ஆறு ஆண்டுகளில் தனது சுற்றுலாத்துறையின் வளர்ச்சியை ஐந்துமடங்காக உயர்த்துவதற்கு இந்தப் புதிய சட்டம் உதவியாக இருக்கும் என்று அமைச்சர்கள் கூறியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.








All the contents on this site are copyrighted ©.