2010-11-11 15:31:33

மியான்மாரில் உறுதியான அரசு அமைக்கப்படவில்லையெனில் அந்நாடு பெரும் பிரச்சனைகளைச் சந்திக்கும் - இயேசுசபை குரு


நவ.11, 2010. மியான்மாரில் உறுதியான ஓர் அரசு அமைக்கப்படவில்லையெனில் உள்நாட்டுப் போர் மூண்டு, அந்நாடும் ஈராக் போன்று பெரும் பிரச்சனைகளைச் சந்திக்கும் என்று இயேசுசபையின் புலம் பெயர்ந்தோர் (அகதிகள்) பணிக்குழுவின் ஆசியப் பிரிவுக்கான இயக்குனர் அருள்தந்தை பெர்னார்ட் அற்புதசாமி கூறினார்.
மியான்மாரில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்டக் கலவரங்களால், அந்நாட்டில் உள்ள Karen என்ற இனத்தவர் 20,000 பேர் தாய்லாந்தில் அடைக்கலம் தேடியுள்ளதைச் சுட்டிக் காட்டிய அருள்தந்தை அற்புதசாமி இவ்வாறு கூறினார்.
மியான்மாரில் தற்போது Karen, Shan, Kachin என்ற சிறுபான்மை இனத்தவர் உள்ளனர் என்றும், இவர்கள் பல ஆண்டுகளாய் தங்களுக்குத் தனிப்பட்ட பகுதிகள் கேட்டு போராடி வருகின்றனர் என்றும் அருள்தந்தை மேலும் கூறினார்.
தாய்லாந்தில் அடைக்கலம் தேடிச் சென்றுள்ள Karen இனத்தவருக்கு இயேசுசபை புலம் பெயர்ந்தோர் (அகதிகள்) பணிக்குழுவின் உறுப்பினர்களும், தாய்லாந்து அரசும் தங்கும் கூடாரங்கள், உணவு, குடிநீர், மருந்துகள் போன்றவைகளை வழங்கி பலவகைகளில் உதவிகள் செய்து வருகின்றனர்.இதற்கிடையே, மியான்மாரில் கடந்த 15 ஆண்டுகளாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள Aung San Suu Kyi ன் விடுதலைக்கான விண்ணப்பத்தை அந்நாட்டின் தலைமை நீதிமன்றம் இவ்வியாழனன்று நிராகரித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.