2010-11-11 15:31:07

பாக்தாத் நகரில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டதற்கு அந்நாட்டு ஆயர்களின் வன்மையான கண்டனங்கள்


நவ.11, 2010. ஈராக்கின் பாக்தாத் நகரில் இப்புதன் அதிகாலையில் கிறிஸ்தவர்களின் குடியிருப்புகள் தாக்கப்பட்டதற்கு அல்கெய்தாவுடன் தொடர்புடைய ஈராக்கின் இஸ்லாமிய அரசு என்ற குழு பொறுப்பேற்றுள்ளது.
மூவரின் உயிர்களைப் பறித்து, மற்றும் 24 பேரைக் காயப்படுத்தியுள்ள இத்தாக்குதல்கள் குறித்து அந்நாட்டு ஆயர்கள் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதல்கள் கிறிஸ்தவர்களிடையே பயத்தையும், கோபத்தையும் அதிகம் வளர்த்துள்ளன. அனைத்துக்கும் மேலாக, இங்குள்ள கிறிஸ்தவர்கள் பெரிதும் குழப்பத்திலும் கலக்கத்திலும் இருப்பதால் உங்கள் செபங்கள் எங்களுக்குப் பெருமளவு தேவை என்று வட ஈராக் பகுதியில் உள்ள கல்தியரீதிப் பேராயர் Bashar Warda கூறினார்.
2003, 2004ம் ஆண்டுகளில் பாக்தாத் நகரில் 40,000 கிறிஸ்தவக் குடும்பங்கள் இருந்தன என்றும், இப்போது அங்கு 50 குடும்பங்களே உள்ளன என்றும் பேராயர் Warda சுட்டிக் காட்டினார்.
கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராய் இருப்பதால் அவர்கள் தாக்கப்படுவதாகவும், உலக அரசுகள் ஒன்று திரண்டு உதவினால் மட்டுமே இப்பகுதியில் அமைதியும் உறுதியான நிலையும் அடைய முடியும் என்று ஆயர் Philip Najim கூறினார்.
அரசு பல்வேறு அறிக்கைகள் வெளியிட்டாலும், கிறிஸ்தவர்களைக் காக்க அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் ஒன்றுமில்லை என்றும் 'இறைவா உன் கரங்களில் என்னை ஒப்படைக்கிறேன்' என்று சிலுவையில் இயேசு சொன்ன அந்த ஜெபத்தையே நாங்கள் இப்போது கூறி வருகிறோம் என்றும் பாக்தாத் சிரிய கத்தோலிக்கப் பேராயர் Atanase Matti Shaba Matoka கூறினார்.தங்கள் நாட்டுப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க திருத்தந்தை முயற்சிகள் செய்ய வேண்டுமென்று ஈராக் நாட்டு ஆயர்கள் விடுத்துள்ள வேண்டுகோளுக்குப் பதிலளித்த திருப்பீடத்தின் செயலர், கர்தினால் Tarcisio Bertone, ஈராக் அரசுடன் திருப்பீடம் தொடர்பு கொண்டு முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாகக் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.