2010-11-11 15:31:49

நவம்பர் 12 நாளும் ஒரு நல்லெண்ணம்


எல்லிஸ் தீவு. அமெரிக்க ஐக்கிய நாட்டு நியுஜெர்சி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள இத்தீவு, ஒரு காலத்தில் அமெரிக்காவில் மக்கள் குடியேறுவதற்கு வாயிலாக இருந்தது. இன்று அமெரிக்காவில் வாழும் சுமார் நாற்பது விழுக்காட்டு மக்களின் பூர்வீகம் இத் தீவுடன் தொடர்பு கொண்டுள்ளது. 1892ம் ஆண்டு முதல் ஒரு கோடியே இருபது இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இத்தீவின் வழியாக அமெரிக்காவில் நுழைந்துள்ளனர். இது 1770களில் சாமுவேல் எல்லிஸ் என்ற வியாபாரிக்குச் சொந்தமாக இருந்தது. இவ்வியாபாரியின் பெயரைக் கொண்ட இந்த எல்லிஸ் தீவு வழியாக 1892ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த 15 வயது Annie Moore என்பவர் முதலில் அமெரிக்காவில் நுழைந்தார். எனினும் முதல் உலகப் போரில் அமெரிக்கா ஈடுபட்டதையடுத்து இத்தீவு வழியாக இடம் பெற்ற குடியேற்றம் குறைந்தது. இந்த எல்லிஸ் தீவும் சந்தேகத்துக்குரிய பகைவர்களுக்குத் தடுப்புக்காவல் முகாமானது. 1924ம் ஆண்டுக்குப் பின்னர் இத்தீவு, சட்டத்துக்குப் புறம்பேயான குடியேறிகளைத் தடுப்புக் காவலில் வைத்து நாடு கடத்தும் இடம், இரண்டாம் உலகப் போரில் காயமடைந்தவர்களைப் பராமரிப்பதற்கான மருத்துவமனை என வேறு பல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது. 1954ம் ஆண்டு நவம்பரில் இங்கிருந்து கடைசி கைதியாக நார்வே நாட்டு கடல் வணிகர் விடுதலை செய்யப்பட்டார். இத்துடன் இத்தீவும் அதே நவம்பர் 12ம் தேதி அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது. இன்று ஆண்டுக்கு சுமார் இருபது இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இத்தீவைப் பார்வையிடுகின்றனர்.

தீவு என்பதைக் கடல்நீர் மட்டுமா சூழ்ந்துள்ளது? வரலாறு வகுக்கும் வேலியும் அத்தீவைச் சூழ்கிறது என்பதற்கு எல்லித்தீவு ஓர் எடுத்துக்காட்டு.

இலங்கைத் தீவு இப்போது கடலால் மட்டுமா சூழ்ந்துள்ளது?







All the contents on this site are copyrighted ©.