2010-11-11 15:31:58

இலங்கையில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு நெருக்கடி


நவ.11, 2010. இலங்கையில் பணியாற்றும் அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தொடர்பான 1980ம் ஆண்டின் சட்டத்தில் அரசு திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது.
இதன்படி இதுவரை அரசிடம் பதிவு செய்து கொள்ளாத நிறுவனங்கள் உடனடியாக பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கான செயலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படி பதிவு செய்து கொள்ளும் நிறுவனங்கள் அரசால் எழுத்துப்பூர்வமாக கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது அரசு கொண்டுள்ள சந்தேகத்தை வெளிப்படுத்துவதாகவே கருத வேண்டியுள்ளது என்று தன்னார்வத் தொண்டு அமைப்புகள் கருத்து வெளியிட்டுள்ளன.
இப்புதிய நடைமுறை இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மீள்கட்டுமான நடவடிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என இலங்கையின் கிழக்கே செயற்பட்டு வரும் உள்ளூர் அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணையத்தின் தலைவரான வர்ணகுலசிங்கம் கமலதாஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.
அரசின் இந்தச் செயற்பாடு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடையே ஒரு அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது எனவும் கமலதாஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் மேற்கொள்ள வேண்டிய மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்கான நிதியுதவிகளைப் பிறநாடுகளிடமிருந்து பெறும் வல்லமை அரசுக்கு இல்லையென்பதால், இம்முயற்சிகளை அரசால் மட்டும் செய்ய முடியாது என கமலதாஸ் கூறுகிறார். அரசின் இந்த நடவடிக்கையால், தொண்டு நிறுவனங்கள் மேற்கொள்ளும் பணிகளுக்கான நிதியுதவியும் அதனால் முன்னேற்றப் பணிகளும் தடைபடும் எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.