2010-11-11 15:31:45

இந்தோனேசியாவில் எரிமலைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பங்கு கோவில்கள், கத்தோலிக்கப் பள்ளிகள், வீடுகள் ஆகியவற்றில் தங்க இடம்


நவ.11, 2010. இந்தோனேசியாவில் Semarang உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த பல பங்கு கோவில்கள், கத்தோலிக்கப் பள்ளிகள், வீடுகள் ஆகியவற்றில் Merapi எரிமலைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க இடம் தரப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவில் ஜாவாத் தீவின் நடுப்பகுதியில் உள்ள Merapi எரிமலை அக்டோபர் 26 முதல் பல்வேறு நாட்களில் வெடித்து வருவதால், அப்பகுதியில் இது வரை 185 இறந்துள்ளனர்; இன்னும் நூற்றுக் கணக்கானோரின் நிலை தெரியவில்லை; மற்றும் 270,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். இப்பகுதியைச் சுற்றி பல நூறு கிலோமீட்டர்கள் தொலைவு சாம்பல் படிந்துள்ளது. இன்னும் இந்த எரிமலை அவ்வப்போது வெடித்து வருகிறது.
கத்தோலிக்கப் பள்ளிகளில் தங்கியுள்ளவர்களில் பல இஸ்லாமியர்களும், இந்துக்களும் உள்ளனர் என்றும் அவர்களுக்குக் குருமட மாணவர்கள் பலவழிகளிலும் உதவிகள் செய்து வருகின்றனர் என்றும் புனித பால் குருமடத் தலைவர் அருள்தந்தை மேத்யூஸ் பூர்வாத்மா (Mathews Purwatma) கூறினார்.எரிமலையிலிருந்து வெளியேறும் சாம்பல் படலம் இந்தோனேசியாவின் பெரும்பகுதியில் பரவி வருகிறதெனவும், இந்தச் சாம்பல் படலத்தால், ஆஸ்திரேலியாவிலிருந்து இயக்கப்படும் விமானச் சேவை நிறுத்தப்பட்டுள்ளதெனவும் செய்திகள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.