2010-11-11 15:30:31

G 20 உச்சி மாநாட்டிற்கானச் செய்தியைத் தென்கொரிய அரசுத் தலைவருக்குத் திருத்தந்தை அனுப்பியுள்ளார்


நவ.11, 2010. உண்மையான, முழு மனித முன்னேற்றத்திற்குத் தேவையான தீர்வுகளைக் காண்பதற்கு G 20 தலைவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இவ்வியாழன், வெள்ளி ஆகிய இரு நாட்கள் தென் கொரியாவின் தலைநகர் Seoulல் நடைபெறும் G 20 உச்சி மாநாட்டிற்கான தன் செய்தியை தென் கொரிய அரசுத் தலைவர் Lee Myung -bakகுக்குத் திருத்தந்தை அனுப்பியுள்ளார்.
அண்மையில் உலகம் சந்தித்த பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை மேலோட்டமாகப் பார்க்காமல், இறைவன் வகுத்த இயற்கை நியதிகள், மனிதர்களின் உண்மை மதிப்பு ஆகிய ஆழமான உண்மைகளின் அடிப்படையில் இந்நேருக்கடியைச் சிந்திக்க தலைவர்கள் கடமைபட்டிருக்கின்றனர் என்று தனது செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.
ஒவ்வொரு முறையும் உலகம் நெருக்கடிகளைச் சந்திக்கும் போது, அவற்றின் ஆழமான காரணங்களைக் கண்டறிந்தால், நீடித்து நிலைக்கும் தீர்வுகளைக் காண முடியும் என்று திருத்தந்தை மேலும் கூறியுள்ளார்.
இந்தியா உட்பட 19 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மத்திய வங்கிகளின் இயக்குனர்கள் ஆகியோருடன் ஐரோப்பிய கூட்டமைப்பையும் உள்ளடக்கியது G 20 என்ற அமைப்பு. இவ்வமைப்பு ஒவ்வோர் ஆண்டும் இரு முறை கூடும். அடுத்த ஆண்டிலிருந்து இவ்வமைப்பு ஒரு முறை கூடும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தலைமைப் பொறுப்பு மாறும் இவ்வமைப்பின் தற்போதைய தலைமைப் பொறுப்பு தென் கொரியாவுக்குத் தரப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இப்பொறுப்பு பிரான்சுக்கு வழங்கப்படும்.







All the contents on this site are copyrighted ©.