2010-11-10 15:06:39

பாக்தாத் நகரில் கிறிஸ்துவக் குடியிருப்புகள் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளன


நவ.10, 2010. இப்புதன் அதிகாலை 6 மணியிலிருந்து 8 மணி வரை பாக்தாத் நகரில் கிறிஸ்தவர்கள் வாழும் ஆறு இடங்களில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் குறைந்தது மூவர் இறந்தனர், மற்றும் 24 பேருக்கு மேல் காயமுற்றனர்.
அக்டோபர் 31, நவம்பர் 7 ஆகிய இரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் பேராலயத்திலும் வீதிகளிலும் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்புதன் அதிகாலையில் நாட்டு வெடிகுண்டுகள் உட்பட பல வெடிகுண்டுகளைக் கொண்டு, கிறிஸ்துவக் குடியிருப்புகள் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளன.
ஈராக் உள்துறை அமைச்சகத்தைச் சார்ந்த ஒருவர் Reuters செய்தி நிறுவனத்திற்கு கொடுத்தத் தகவல்படி, இந்தத் தாக்குதல்களுக்கும், அக்டோபர் 31 அன்று நடந்த பேராலயத் தாக்குதல்களுக்கும் தொடர்பு உள்ளதென்று தெரிகிறது.
உலக வரலாற்றிலேயே அரசு என்று ஒன்று அமையாமல் நீண்ட காலம் இருக்கும் ஒரு நாடு ஈராக் தான் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.அமெரிக்க ஐக்கிய நாடு ஈராக் மீது படையெடுத்த 2003ம் ஆண்டிலிருந்து, கிறிஸ்தவ சமுதாயம் தொடர்ந்து பல வன்முறைத் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றது. கல்தேய ரீதி கத்தோலிக்கப் பேராயர் Paulos Faraj Rahh 2008ம் ஆண்டு கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டது, இன்னும் பல அருள்தந்தையர்கள் கொலை செய்யப்பட்டது உட்பட நூற்றுக் கணக்கான கிறிஸ்தவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.