2010-11-10 14:33:42

நவம்பர் 11 – நாளும் ஒரு நல்லெண்ணம்


தீதும் நன்றும் பிறர் தர வாரா.
என்ன ஆழமான வரிகள்! வாழ்க்கைத் தத்துவத்தையே சொல்லி விடும் வரிகள்.
பிறரைப்பற்றி அறிந்துகொள்வதில் இருக்கிற ஆர்வம், தன்னைப் பற்றி, தனக்குள்ளேயே இருப்பவைகளைப் பற்றி அறிந்துகொள்வதில் மனிதன் காட்டுகிறானா!
வான சாஸ்திரம் படிச்சி வானத்தை ஆராய்ச்சி செய்கிறோம், கடலில புதைந்து கிடக்கிற மர்மங்களை ஆராய்ச்சி செய்கிறோம். எரிமலைகளை, பனிப்பிரதேசங்களை ஆராய்ச்சி செய்கிறோம். ஆனால் மனத்தை அகழ்ந்து ஆராய்ச்சி செய்ய அஞ்சுகிறோம்.
மனிதன் அனுபவிக்கும் எல்லா இன்பதுன்பங்களுக்கும் மனம் தான் காரணம் என்கிற விடயத்தை புரிந்து கொண்டால், நரகத்திலேயும் இன்பத்தை அனுபவிக்க முடியும். அதை தெரிந்துக் கொள்ளாததால் சொர்க்கத்தில் கூட நரகத்தை உண்டுபண்ணிக் கொண்டேயிருக்கிறோம்.
பொறாமை, வெறுப்பு, அகம்பாவம், தாழ்வுமனப்பான்மை, பயம், அளவுகடந்த காம இச்சை, கருமித்தனம், வக்கிர எண்ணம் மற்றவர்களை துன்பப்படுத்திப் பார்ப்பது, மிகுந்த சுயநலப்பற்று எனப் பல தீயக் குணங்களில் சிக்கிச் சின்னாபின்னமாகிறோம். என்னவோ அடைய வேண்டும் என எண்ணி எப்பவுமே மனநிம்மதியே இல்லாத ஓட்டம்.
இந்தத் துன்பங்களில் இருந்து வெளியில் வரவேண்டும் என்றால் தன்னையே முழுவதுமாக அறிந்து கொள்ள வேண்டும். மனதுக்குள்ளே தான் எல்லா பாதிப்புகளும் உண்டாகின்றன.
மீண்டும் உணர்வோம். தீதும் நன்றும் பிறர் தர வாரா.







All the contents on this site are copyrighted ©.