2010-11-10 14:30:21

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


நவ 10, 2010. உரோம் நகரின் இரண்டு நாள் தொடர் மழைக்குப்பின் வானம் பிரகாசமாக ஒளிர்விட, காலநிலையும் வழக்கத்திற்கு மாறாக சிறிது வெப்பமாக, இதமாக இருக்க, திருத்தந்தை 6ம் சின்னப்பர் மண்டபத்தில் ஆயிரக்கணக்கானத் திருப்பயணிகள் குழுமியிருக்க, இவ்வார புதன் பொதுமறைப் போதகத்தை துவக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

கடந்த வார இறுதியில் அவர் இஸ்பெயினின் சந்தியாகோ தெ கம்பொஸ்தெல்லா மற்றும் பர்சலோனாவில் மேற்கொண்ட திருப்பயணம் குறித்ததாய் இவ்வாரப் பொது மறைபோதகம் இருந்தது.

இஸ்பெயின் மற்றும் ஐரோப்பாவின் முக்கிய இவ்விரு நகர்களிலும் கடந்த வார இறுதியின் அப்போஸ்தலிக்க திருப்பயணம் மேற்கொண்டேன். கம்பொஸ்தெல்லாவின் இப்புனித ஆண்டில் திருப்பயணிகளுள் ஒரு திருப்பயணியாக அப்போஸ்தலரான புனித பெரிய யாகப்பருக்கு வணக்கம் செலுத்த அங்குச் சென்றேன். புனித பெரிய யாகப்பர் அறிவித்த நற்செய்தியை வாரி அணைப்பது, மற்றும் நம் தினசரி வாழ்வில் கிறிஸ்துவுக்குச் சாட்சியாக இருப்பதற்கும், நற்செய்தியின் உண்மைக்கும் ஞானத்திற்கும் விசுவாசமுள்ளவர்களாக இருந்து சமூகத்தைப் பலப்படுத்துவதற்கும் நாம் திருமுழுக்கு வழி பெற்ற நம் கடமையை தழுவுவது ஆகியவைகளின் அடையாளமாக, இப்புனிதரின் திரு உருவத்தைத் தழுவும் பாரம்பரியப் பழக்கமுறையானது உள்ளது. மிகப்பெரும் கலைஞர் Antoni Gaudí யின் மிக உன்னதப் படைப்பான Sagrada Familia கோவிலை பர்சலோனாவில் இஞ்ஞாயிறன்று அர்ப்பணித்து வழிபாடு நடத்தினேன். இறைவன் வதியும் ஆலயமாக திருச்சபைக்குள் மாறும்படி மனிதகுலமனைத்திற்கும் அழைப்பு விடுக்கும் மனு உருவாம் கிறிஸ்து எனும் அனைத்து அழகின் முடிவற்ற ஆதாரத்தை இம்மாபெரும் கட்டிடத்தில் கொண்டாட ஆவல் கொண்டார் கலைஞர் Gaudí.

இஸ்பெயின் மற்றும் ஐரோப்பாவின் அனைத்து மக்களும் இவ்வுலகில், இக்கண்டத்தின் வரலாற்று மறைப்பணி நோக்கங்களை இக்காலப் பாதைகளோடு இணைந்து எடுத்துச் செல்வதற்கான தூண்டுதலைத் தங்களின் கிறிஸ்தவ மூலங்களில் எப்போதும் கண்டுகொள்ளவும், அனைத்துக் குடும்பங்களும் சமூகத்தில் தங்களுக்கே உரிய தனித்துவப் பங்கை நிறைவேற்றவும் நாமனைவரும் இணைந்து ஜெபிப்போம். இந்த வேண்டுதலுடன் தன் புதன் பொது மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.








All the contents on this site are copyrighted ©.