2010-11-10 15:07:29

கொத்தணிக் குண்டுகள் பற்றிய மாநாடு


நவ.10, 2010. கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நாடுகளின் மாநாடு தென் கிழக்கு ஆசியாவில் உள்ள லாவோஸின் தலைநகர் வியந்தியானில் (Viang Chan) இச்செவ்வாயன்று ஆரம்பமாகியது.
கொத்தணிக் குண்டுகள் குறித்த முதலாவது மாநாடு நடைபெறுவதற்கு லாவோஸ் ஒரு பொருத்தமான இடம்தான். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகள் மற்றும் எழுபதுகளில் இந்தத் தென்கிழக்காசிய நாட்டின் மீது பறந்த அமெரிக்கக் குண்டுவீச்சு விமானங்கள், லட்சக்கணக்கான குண்டுகளை வீசின. இதன் மூலம் உலகிலேயே அதிகப்படியாக குண்டு வீச்சுக்கு இலக்கான நாடாக இது கணிக்கப்படுகின்றது.
அதுமட்டுமல்ல, பல ஆண்டுகளாய் அங்கு கிடக்கும் வெடிக்காத குண்டுகள் தொடர்ச்சியாக உயிர்களையும், மனிதர்களின் அவயவங்களையும் பறித்து வருகின்றன. இப்படிக் கொல்லப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள், அதுவும் சிறார்கள். கொத்தணிக் குண்டுகள் பெரியதொரு மனித அழிவாயுதம் என்று அதற்கு எதிரான செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
கொத்தணிக் குண்டுகள் தயாரிப்பதை தடைசெய்யும் வகையிலான ''கொத்தணிக் குண்டுகள் குறித்த ஒப்பந்தத்தில்'' நூற்றுக்கும் அதிகமான நாடுகள் கையொப்பமிட்டுள்ளன.
ஆனால், அமெரிக்கா, இரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் போன்ற சில உலகின் முக்கிய இராணுவ சக்திகள் அதில் கையொப்பமிட மறுத்துள்ளன. இந்த ஆயுதம் இராணுவ பயன்பாட்டுக்குச் சட்டப்பூர்வமானவை என்று அந்த நாடுகள் கூறுகின்றன.
இந்த உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களை செயற்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கிலான திட்டங்களை லாவோஸில் நடைபெறும் மாநாடு பிரசுரிக்கவுள்ளது. இந்த ஒப்பந்தம் கொத்தணிக்குண்டுகளுக்கு எதிரான மக்கள் கருத்தை ஒரு பெரும் அலையாக உருவெடுக்கச் செய்யும் என்று கூறுகின்ற கொத்தணிக்குண்டுகளுக்கு எதிரான செயற்பாட்டாளர்கள், அதனால், இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடாத நாடுகள் கூட எதிர்காலத்தில் அத்தகைய குண்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க நிர்பந்திக்கப்படும் என்று குறிப்பிடுகிறார்கள்.







All the contents on this site are copyrighted ©.