2010-11-09 16:01:18

விவிலியத் தேடல்


RealAudioMP3
"தம் பெயர்க்கேற்ப எனை நீதி வழி நடத்திடுவார்." திருப்பாடல் 23ன் இந்த வரியில் நம் தேடலை இன்று தொடர்கிறோம். நீதி வழி, நேரிய வழி என்ற நம் வாழ்வுப் பாதை பல சமயங்களில் சிக்கலான பாதை என்று சிந்தித்தோம். இந்த வாழ்வுப் பாதையில் நம்மை வழி நடத்தும் இறைவன், நம்மை அழைத்துச் செல்வாரே தவிர, நம் விருப்பத்திற்கு எதிராக இழுத்துச் செல்ல மாட்டார் என்றும் சிந்தித்தோம். பாதை என்றதும் மனதில் எழும் மற்றொரு சொல், மற்றொரு எண்ணம் பயணம். இன்றைய விவிலியத் தேடலில் பயணம் என்ற எண்ணத்தை ஆழப்படுத்த முயல்வோம்.

நாடு விட்டு நாடு நாடோடிகளாய் வாழ்ந்து வந்த இஸ்ரயேலர்களுக்கு உலக வாழ்க்கை ஒரு பயணம் என்பதில் சிறிதும் தயக்கம் இருந்ததில்லை. அவர்களது பயணங்களை, சிறப்பாக அவர்கள் எகிப்திலிருந்து வெளியேறிய அந்தப் பயணத்தை, அடிக்கடி நினைவு படுத்தும் பகுதிகள் பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் காணக்கிடக்கின்றன.
விடுதலைப்பயணம் 12: 37-38
இஸ்ரயேல் மக்கள் இராம்சேசிலிருந்து சுக்கோத்துக்கு இடம் பெயர்ந்து சென்றனர். இவர்களில் குழந்தைகள் தவிர நடந்து செல்லக்கூடிய ஆடவர் மட்டும் ஏறத்தாழ ஆறு லட்சம் பேர் ஆவர். மேலும் அவர்களோடு பல இனப் பெருந்திரளும், ஆட்டுமந்தை மாட்டுமந்தை என்று பெருந்தொகையான கால்நடைகளும் புறப்பட்டுச் சென்றன. 
எண்ணிக்கை 33: 1-2
மோசே, ஆரோன் ஆகியோர் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டைவிட்டுப் படைத்திரளாக வெளியேறிச் சென்றபோது அவர்கள் பயணம் செய்த பகுதிகள் இவையே: அவர்கள் புறப்பட்ட இடங்களை மோசே ஆண்டவர் கட்டளைப்படி படிப்படியாக எழுதி வைத்தார்
அவர்கள் பயணிகள் என்பதை அடிக்கடி அவர்களுக்கு உணர்த்தி வந்த இறைவன், தானும் அவர்களுடன் பயணம் செய்தார். இதையும் இஸ்ரயேலர்கள் உணர்ந்திருந்தனர்.
இணைச்சட்டம் 1: 31-33
பாலை நிலத்தில், நீங்கள் நடந்து வந்த வழிகளில் எல்லாம் இங்கு வந்து சேரும்வரை ஒருவன் தன் மகனைத் தூக்கிச் செல்வது போல, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களைத் தூக்கி வந்ததைக் கண்டீர்களே! ஆயினும் இவற்றுக்குப் பின்னும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நீங்கள் உறுதியுடன் பற்றிக் கொள்ளவில்லை. பாளையமிறங்கத் தக்க இடத்தை உங்களுக்காகத் தேடவும், நீங்கள் செல்ல வேண்டிய வழியை உங்களுக்குக் காட்டவும், இரவில் நெருப்பிலும் பகலில் மேகத்திலும் உங்கள் முன் அவர் நடந்து சென்றாரே! 
இவ்வுலகப் பயணத்தை முடித்துச் சென்றுள்ள பலரை எண்ணிப்பார்க்கும் இந்த நவம்பர் மாதத்தில், உலக வாழ்வு ஒரு பயணம் என்பதை நாம் ஆழமாக உணர வேண்டும். உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதரும் ஒரு பயணி என்ற உண்மையை உள்ளூர உணர்ந்தால், முழு மனதோடு இதை நம்பினால், நம் சொந்த வாழ்விலும், இந்த உலகத்திலும் பாதிப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும். இது என் ஆழமான நம்பிக்கை. ஆனால், உலகில் பலர் இந்த உண்மையை அறிவுப் பூர்வமாய் உணர்வதோ, மனத்தால் நம்புவதோ இல்லை. ஏதோ இந்த உலக வாழ்க்கைதான் நிலையானது, நிரந்தரமானது என்பது போல் நாம் வாழ்க்கையை நடத்துகிறோம்.
உலகமே நிரந்தரம் என்ற எண்ணத்தின் பயங்கரமான ஒரு வெளிப்பாடு, ஓர் எடுத்துக்காட்டு... உலகப் பெரும் செல்வந்தர்கள் வாழும் வாழ்க்கை. அதிலும் முக்கியமாக அச்செல்வந்தர்களில் ஒருவர் மும்பையில் கட்டியுள்ள அவரது வீடு.

உங்களுக்கும் எனக்கும் தெரியும்... இந்த பட்டியலில் பல ஆயிரம் அங்கத்தினர்களை நாம் சேர்க்க முடியும். நம்மையும் இதில் சேர்த்துக் கொள்வோம். நாம் அனைவருமே இந்த உலகில் வெறும் பயணிகள்தாம் என்பதை உணர்ந்தால்... எத்தனையோ பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.

பயணம் என்று எண்ணும் போது, நம்முடன் பயணம் செய்யும் மற்றவர்களையும் நினைக்கத் தூண்டுகிறது திருப்பாடல் 23ன் வரிகள். ஆயன் நடத்திச் செல்வது நான் என்ற தனி ஆடு அல்ல. என்னுடன் இன்னும் பல கோடி ஆடுகளை ஆயன் வழி நடத்துகிறார்.
பயணம், உடன் பயணிகள் என்றதும் என் மனதில் விரியும் காட்சி இரயில் பயணம். முன் பதிவு செய்து போகும் இந்தப் பயணத்தில் நம்மைச் சுற்றி ஆறு அல்லது ஏழு பேர் இருப்பார்கள். பயணத்தின் ஆரம்பத்தில் ஒருவரை ஒருவர் அறியாததால், ஒரு இறுக்கமானச் சூழல் அங்கிருக்கும். வண்டி நகர ஆரம்பித்ததும், ஒருவர், "நீங்க எங்க போறீங்க?" என்று ஆரம்பிப்பார். அதன்பின் வானிலை, விளையாட்டு, அரசியல் என்று பொதுவில் ஆரம்பமாகும் நமது உரையாடல், செய்யும் தொழில், குடும்பம் என்று இன்னும் கொஞ்சம் நெருக்கமான கருத்துப் பரிமாற்றங்களாய் மாறும்.
உணவு நேரம் வந்ததும், அவரவர் தனியே கொண்டு வந்த உணவுப் பொட்டலங்கள் பிரிக்கப்படும், அவை அனைத்தும் கலந்து ஒரு அறுசுவை விருந்து நடைபெறும். உணவு கொண்டு வராதவர்களும் இதில் இணைத்துக் கொள்ளப்படுவர். பயண முடிவில், தொலைபேசி எண்கள், வீட்டு முகவரி என்று பல அம்சங்கள் பரிமாறப்படும். தனி ஒருவராய் பயணத்தை ஆரம்பிக்கும் நாம், ஒரு குடும்பமாய் இறங்கிப் போகும் அழகே தனி.
நான் இப்போது விவரித்த இந்தக் காட்சி அண்மைக் காலங்களில் தடைபட்டு விட்டது. முக்கியமாக, உணவுப் பரிமாற்றம் பெரிதும் தடைபட்டு விட்டது. காரணம் சந்தேகம். உணவுப் பரிமாற்றத்தின் வழியாக மயக்க மருந்தைக் கொடுத்து பொருட்களைத் திருடிச் செல்லும் ஆபத்து அதிகமாகி விட்டதால், இந்த சந்தேகம்.
இரயில் பயணம் நம் உலகப் பயணத்திற்கான ஓர் ஆழமான உவமை. நம்மில் பலவகைப் பறிமாற்றங்களை, பகிர்தலை உருவாக்கி வந்த இரயில் பயணங்கள் ஒரு சில சுயநல சுறாமீன்களால் தடம் புரண்டு விட்டன. இந்தச் சுயநலம் தான் உலகப் பயணத்தையும் தலை கீழாக மாற்றுகிறது. பார்க்கும் எதையும் விழுங்கும் வெறி கொண்டவை சுறாமீன்கள். அதேபோல், இச்சுயநல சுறாமீன்களைப் பொறுத்த வரை மற்ற மனிதர்கள் அவர்கள் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்கள்.

மற்ற மனிதர்களைப் பொருட்களாகப் பயன்படுத்துவதுதான் உலகத்திலேயே பெரிய பாவம் என்று சொல்கிறார் Martin Buber என்ற யூத மெய்யியலாளர். இவர் 1923ம் ஆண்டு "I and Thou" அதாவது, "நானும் தாங்களும்" என்ற சிறந்ததொரு நூலை எழுதினார். மனித உறவுகளை இரு வகையாகப் பிரிக்கிறார் Martin. "நான்-தாங்கள்" (“I and Thou") என்ற உறவு, "நான்-அது" (“I and It") என்ற உறவு.
பிற மனிதர்களை மதிப்பிற்குரிய மனிதர்களாக நடத்தும்போது, நான்-தாங்கள் உறவு நம்மிடம் உள்ளது. பிறரைப் பொருட்களாகப் பயன்படுத்தும்போது, நான்-அது என்ற உறவு வெளிப்படுகிறது என்று அவர் விளக்குகிறார். தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் இந்த உறவுக்கு விளக்கம் தருகிறார்.
Martin ஜெர்மனியில் மெய்யியல் பேராசிரியராகப் பணி செய்தார். முதல் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. Martin ஒரு முக்கியமான மெய்யியல் கேள்விக்கு ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருந்தார். அந்நேரத்தில் ஓர் இளைஞன் பதட்டத்துடன் அவரைக் காண வந்தார். அந்த இளைஞன் இராணவத்தில் சேர வேண்டுமென்று கட்டளை வந்திருந்தது. உலகப் போரை முற்றிலும் விரும்பாதவர் அந்த இளைஞன். அதே நேரம் நாட்டுப் பற்றும் உடையவர். இராணுவத்தில் சேர்ந்து போரில் உயிர்களை அழிப்பதா? அல்லது, இராணுவத்தில் சேராமல் இருக்க காரணங்களை எடுத்துச் சொல்லி விலகுவதா? அப்படி விலகினால், தனக்குப் பதிலாக மற்றொரு இளைஞன் அனுப்பப்பட்டு அவன் உயிருக்கு ஆபத்து வருமே? இப்படி அவர் தன் மனதில் எழுந்த கேள்விகளை எல்லாம் பேராசிரியரிடம் எழுப்பி, ஒரு தீர்வு கேட்டார். Martin தன் மெய்யியல் கேள்விக்கு விடை தேடுவதில் மும்முரமாய் இருந்ததால், அந்த இளைஞன் சொன்னதை ஓரளவே கேட்டார். விரைவில் அவரை அனுப்பி விட்டுத் தன் ஆராய்ச்சியைத் தொடர விரும்பினார். எனவே அவர் அந்த இளைஞனிடம், "நீ இப்போது சந்தித்திருப்பது ஒரு தீவிரப் போராட்டம்தான். இதில் உனக்கு எது சரியென்று படுகிறதோ, அதைச் செய்." என்று சொல்லி அந்த இளைஞனை அனுப்பிவிட்டார்.
அந்த இளைஞன் இந்தப் போராட்டத்தில் சரியான தீர்வு கிடைக்காமல் அன்றிரவு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கேள்விப்பட்ட Martin Buber நிலை குலைந்து போனார். தனது சுயநலன் காரணமாக அந்த இளைஞனை ஒரு மனிதனாகக் கருதாமல், போராடும் அவரது உணர்வுகளை மதிக்காமல், அவரைத் தன் மெய்யியல் ஆராய்ச்சிக்கு வந்த தடை என்று மட்டுமே பார்த்ததால், அவரை விரைவில் அனுப்பிவிட்டது, அவரை இந்த உலகை விட்டே அனுப்பிவிட்டதே என்று மனம் வருந்தினார்.

நமது வாழ்வுப் பயணத்தில் உடன் வரும் பயணிகளை நாம் எப்படி பார்க்கிறோம்? நம் குடும்பங்களில் உள்ளவர்களை எப்படி பார்க்கிறோம், எப்படி நடத்துகிறோம்? நமது அலுவல் இடங்களில், போது இடங்களில்... மற்றவரோடு நாம் கொள்ளும் உறவு நான்-தாங்கள் என்ற உறவா? நான்-அது என்ற உறவா?நாம் அனைவரும் உலகில் பயணம் செய்பவர்கள் என்பதை உணரவும் நம்பவும் இறைவன் துணை புரியட்டும். இந்தப் பயணத்தில் நம்மோடு பயணம் செய்யும் பிறரை மதித்து நான்-அவர் என்ற உறவை வளர்க்க இறைவனின் அருள் வேண்டுவோம். மிக முக்கியமாக, இஸ்ரயேல் மக்களைப் போல், நமது பயணத்தில் இறைவன் எப்போதும் உடன் வருகிறார் என்ற உணர்வுடன் நமது வாழ்வுப் பயணத்தைத் தொடர்வோம்.







All the contents on this site are copyrighted ©.