2010-11-08 15:33:42

பேறுகாலத்தில் தாய்மார்களுக்கு இருபது வார விடுமுறையை வழங்கும் ஐரோப்பிய ஐக்கிய அவையின் புதிய சட்டம்.


நவ 08, 2010. குழந்தைப்பேறு காலத்தில் தாய்மார்களுக்கு முழு ஊதியத்துடன் இருபது வார விடுமுறையை வழங்கும் ஐரோப்பிய ஐக்கிய அவையின் புதிய சட்டம் குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது குழந்தைகளுக்கான இங்கிலாந்தின் கத்தோலிக்க அமைப்பு.

பேறுகாலத்தின் போது முழு ஊதியத்துடன் கூடிய 14 வார விடுமுறையாக இருந்ததை 18 வாரமாக அதிகரிக்க வேண்டும் என ஐரோப்பிய ஐக்கிய அவை பரிந்துரைத்து வந்த வேளையில், தற்போது அது 20 வாரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது நல்ல ஒரு செய்தி என்றார் அக்கத்தோலிக்க அமைப்பின் உயர் இயக்குனர் ரோஸ்மேரி கீனன்.

இத்தகைய பேறுகால விடுமுறை அதிகரிப்பின் மூலம், தாய்மார்கள் வருமானக்குறைவுக் குறித்தக் கவலையின்றி தங்கள் குழந்தைகளைப் பராமரிக்க அதிகக் காலம் கிட்டியுள்ளது என மேலும் கூறினார் கீனன்.

அதேவேளை, இன்றையப் பொருளாதாரச் சரிவு நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள், மகப்பேறு கால ஊதியத்தைத் தவிர்க்க, ஆண்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க இருக்கும் ஆபத்தைக் குறித்தும் கவலையை வெளியிட்டார் அக்கத்தோலிக்க அதிகாரி.

இதற்கிடையே, இச்சட்டப் பரிந்துரையை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் கொணர்ந்த போர்த்துக்கல்லின் Edite Estrela உரைக்கையில், ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுமுறை அதிகரிக்கப்பட்டுள்ளது, நிதி நிலை மீதான சுமையல்ல மாறாக வருங்காலத்திற்கான முதலீடு என்றார்.








All the contents on this site are copyrighted ©.