2010-11-08 15:32:06

இலங்கையின் வட பகுதியில் ஒரு நாளைக்கு 4 தற்கொலைகள்


நவ 08, 2010. ஒரு காலத்தில் இலங்கையின் போர்ப் பகுதியாக இருந்த வட மாகாணத்தில் ஒரு நாளைக்கு 4 தற்கொலைகள் வரை இடம்பெறுவதாக அறிவித்துள்ளது இஞ்ஞாயிறின் Sunday Leader இதழ்.

வடபகுதியில் வாழும் பெரும்பாலான மக்கள் மன அழுத்தம், மனத்தளர்ச்சி உட்பட பலவிதமான மனநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக இப்பத்திரிகை வழி அறிவித்த வன்னியின் மன இயல் வல்லுனர் தயாளினி தியாகராஜா, தற்கொலைகள் அதிகரித்து வருவதாகவும் அதிலும் குறிப்பாக பெண்களிடையே இது அதிகமாகக் காணப்படுவதாகவும் கூறினார்.

கிளிநொச்சி மருத்துவமனையின் கூற்றுப்படி, ஒவ்வொரு நாளும் நான்கு பேர் வரை தற்கொலைச் செய்து கொள்வதாகவும் தெரிவித்தார் அவர்.

இத்தகைய மனநிலை பாதிப்புகளிலிருந்து விடுபட இலங்கையின் வடபகுதி மக்களுக்குச் சில தலைமுறைகளின் காலம் கூட ஆகலாம் என மேலும் கவலையை வெளியிட்டார் மருத்துவர் தயாளினி.

இதற்கிடையே, இலங்கையில் இளையோரிடையேயும் சர்க்கரை நோயின் பாதிப்பு அதிகரித்து வருவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இருபது வயதிற்கு மேற்பட்டோருள் பத்தில் ஒருவருக்கும், நகர்களில் வாழ்வோருள் ஐந்தில் ஒருவருக்கும் நீரழிவு நோயின் பாதிப்பு இருப்பதாகக் கூறினார் இலங்கை பேராசிரியர் சந்திரிகா விஜயரெத்னே.

சிறுநீரகச் செயலிழப்பு, பார்வை இழத்தல், உடலுறுப்புகளை இழத்தல் மற்றும் இதய நோய் போன்றவைகளுக்கு நீரழிவு நோய் ஒரு காரணமாக உள்ளது எனவும் கூறினார் அவர்.








All the contents on this site are copyrighted ©.