2010-11-07 12:42:45

திருத்தந்தை : ஐரோப்பாவின் சுதந்திர வாழ்வுக்குக் கடவுள் பகைவர் அல்ல


நவ.07,2010. “தனது சுதந்திர வாழ்வுக்குக் கடவுள் பகைவர் என்ற எண்ணத்தை ஐரோப்பா கைவிட்டு அக்கண்டம் அச்சமின்றி அவருக்குத் தன்னைக் கையளிக்க வேண்டும்”. இத்தகைய அழைப்பை மையப்படுத்தி இந்த தனது மறையுரையைத் தொடங்கினார் திருத்தந்தை.

கடவுளின் இருப்பு நிச்சயமானது, அவர் இருக்கிறார். அவர் ஒருவரே வரம்பற்றவர், முழுமையானவர், RealAudioMP3 நம்பத்தகுந்தவர், அப்பழுக்கற்ற அன்பானவர். அவரது முடிவற்ற இலக்கு, இவ்வுலகின் நன்மை, உண்மை மற்றும் அழகானப் பொருட்களுக்குப் பின்னே சுடர்விட்டுக் கொண்டிருக்கின்றது. உண்மையில் வியத்தகு இந்தப் பண்பு மனித இதயங்களுக்குப் போதுமானதாக இல்லை. இதனைப் புரிந்து கொண்ட இயேசுவின் புனித தெரேசாவும், “கடவுள் மடடுமே போதுமானவர்” என்று எழுதினார். “கடவுள் ஒருவிதத்தில் மனிதனின் பகைவன். அவனது சுதந்திரத்திற்கு அவர் எதிரி” என்ற எண்ணத்தில் 19ம் நூற்றாண்டில் ஐரோப்பா எப்படியோ உறுதியாக வளர்ந்து விட்டது. உண்மையான விவிலிய விசுவாசத்தை இருட்டடிக்கும் முயற்சியும் இருந்தது. ஆனால் கடவுளே நமது உயிர் வாழ்க்கையின் ஆரம்பம். அவரே நமது சுதந்திரத்தின் அச்சாணி. ஐரோப்பாவின் வானங்களுக்குக் கீழிருந்து நாம் மீண்டும் கடவுள் குரலைக் கேட்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இப்பொழுது சொல்லப்படும் இந்தப் புனிதச் சொற்கள் வீணாகிவிடக் கூடாது. இவை அதன் நோக்கத்தை விட்டு வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு விடக்கூடாது. இது தூய வழியில் பேசப்பட வேண்டும். நம் அன்றாட வாழ்க்கையில், வேலையின் மௌனத்தில், சகோதரத்துவ அன்பில், ஆண்டுகள் கொண்டு வரும் இன்னல்களில் இந்த வார்த்தைகளைக் கேட்க வேண்டும். ஐரோப்பா கடவுளுக்குத் தன்னைத் திறக்க வேண்டும். பயமின்றி அவரைச் சந்திப்பதற்கு வர வேண்டும். அவரது அருளுடன் மனித மாண்புக்காக உழைக்க வேண்டும். இதற்கு ஐரோப்பா, அன்பின் உச்சகட்ட அடையாளமான இயேசுவின் திருச்சிலுவையை வழிகாட்டும் விண்மீனாகக் கொள்ள வேண்டும். சிலுவையும் அன்பும், சிலுவையும் ஒளியும் நமது வரலாற்றில் ஒரே பொருளுடையவை. ஏனெனில் கிறிஸ்து, நம்மீது வைத்துள்ள அவரது மேலான உன்னத அன்புக்குச் சாட்சியாக அச்சிலுவையில் தொங்குவதற்குத் தம்மையே கையளித்தார். மன்னிப்பையும் ஒப்புரவையும் போதிக்கவும், தீமையை நன்மையால் எவ்வாறு வெல்ல முடியும் என்பதைக் காட்டுவதற்கும் இவ்வாறு செய்தார். மேலும், ஒருவர் கடவுளின் புதல்வர், புதல்விகளைப் பராமரிக்காமல் அவரை வழிபட முடியாது. எனவே மனித மாண்பு போற்றப்பட வேண்டும். அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்தின் ஐரோப்பா, பிற கண்டங்களோடும் தனது சகோதரத்துவ தோழமையைக் காட்ட வேண்டும். உண்மையான மனிதனாக வாழ்வதன் மூலம் உண்மையான கடவுளுக்குத் தன்னைத் திறக்க வேண்டும். உலகில் புதிய நற்செய்திப் பணிக் கூறுகள் வளர்க்கப்பட வேண்டும். ஐரோப்பா, குறிப்பாக அதன் இளையோர் இருளிலிருந்து விசுவாச ஒளிக்கு வர வேண்டும்.

இவ்வாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சந்தியாகோ தெ கொம்போஸ்தெல்லா வில் நிகழ்த்திய திருப்பலியில் மறையுறையாற்றினார்.







All the contents on this site are copyrighted ©.