2010-11-06 15:57:41

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
நவம்பர் மாதம் இறந்தோரை அடிக்கடி நினைவுகூரும் ஒரு மாதம். கல்லறைகளுக்குச் செல்லுதல், இறந்தோருக்கான திருப்பலிகள் என்று பல அர்த்தமுள்ள செயல்களில் நாம் ஈடுபடுகிறோம். இந்தச் சூழலில் இன்று நமக்குத் தரப்பட்டுள்ள ஞாயிறு வாசகங்கள் போருத்தமானவைகளாகத் தெரிகின்றன. வாழ்வு, மரணம், மறுவாழ்வு ஆகியவைகளைச் சிந்திக்க இது நல்லதொரு வாய்ப்பு.
வீரம் மிகுந்த, விசுவாசம் நிறைந்த ஒரு தாய், அவரது ஏழு மகன்கள் ஆகியோரைப் பற்றி இரண்டாம் மக்கபேயர் நூலின் 7ம் பிரிவிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் நமக்குச் சில பாடங்களைச் சொல்லித் தருகிறது. தாங்கள் நம்பும் இறைவனுக்கு முன் துன்பம் மரணம் இவைகளுக்கு எந்தச் சக்தியுமில்லை என்று இவர்கள் சாவைச் சந்திக்கத் துணிகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை, மரணம் ஒரு முடிவு அல்ல, மறுவாழ்வைத் திறக்கும் ஒரு கதவு.
இதற்கு நேர் மாறான எண்ணங்கள் கொண்ட சதுசேயர்களை இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கின்றோம். லூக்கா நற்செய்தியின் 20ம் பிரிவில் இயேசுவைத் தங்கள் வாதத் திறமையால் மடக்க வந்த சதுசேயர்களுக்கு இவ்வுலகம் மட்டுமே உண்மை. மறு உலகம் என்பதெல்லாம் மயக்கம் தரும் கற்பனை. இந்த மறு உலகைப் பற்றி மீண்டும், மீண்டும் கூறிவந்த இயேசுவை மக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தும் எண்ணத்துடன் இயேசுவிடம் ஒரு புதிரான கேள்வியை எழுப்புகின்றனர் சதுசேயர்கள். ஏழு சகோதரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஒரு பெண்ணை மணக்கின்றனர். இறக்கின்றனர். அந்தப் பெண்ணும் இறக்கிறார். மறு உலகில் அந்தப் பெண் யாருடைய மனைவியாக இருப்பார் என்பதுதான் இந்தப் புதிர். மோசேயின் நெறிமுறைகள் குறித்த உண்மையைப் புரிந்து கொள்வதற்கு இந்தக் கேள்வியைக் கேட்டதாக அவர்கள் சொன்னாலும், மறு வாழ்வைக் குறித்து கேலி செய்யும் தொனியுடன் அவர்கள் கேட்ட இந்தக் கேள்வியை இயேசு புரிந்து கொண்டு, இந்தப் புதிருக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், மறு வாழ்வைக் குறித்து, அந்த வாழ்வில் நாம் சந்திக்கவிருக்கும் இறைவனைக் குறித்து அழகான விளக்கங்களைத் தருகிறார். மறு வாழ்வில் நாம் வானதூதர்களைப் போல் இருப்போம், நமது இறைவன் இறந்தோரின் இறைவன் அல்ல, வாழ்வோரின் இறைவன் என்பவை இயேசு தந்த அழகான எண்ணங்கள்.

உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் (பார்க்கப் போனால், எல்லா உயிரினங்களுக்கும்) பிறப்பு, இறப்பு என்ற இரு புள்ளிகள் உண்டு. இவ்விரு புள்ளிகளையும் இணைத்து நாம் வரையும் கோலம் நமது வாழ்வு. பல நேரங்களில் நாம் வரையும் கோலம் அலங்கோலமாய் மாறினாலும், அதை அழித்துத் திருத்தி மீண்டும் மீண்டும் அழகானக் கோலம் வரைய நமக்கு அழைப்பு வந்த வண்ணம் உள்ளது.
இவ்விரு புள்ளிகளில் பிறப்பு என்ற புள்ளி எல்லாருக்கும் தெளிவாகத் தெரியும். இறப்பு என்ற புள்ளி கட்டாயம் எங்கோ ஓரிடத்தில் இருக்கிறதென்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், அந்தப் புள்ளியைப் பற்றிய தெளிவு நம்மில் பலருக்குக் கிடைப்பதில்லை. அனைவரும் இறப்போம் என்பது நிச்சயம். ஆனால், எப்போது, எங்கே எப்படி இறப்போம் என்பது பலருக்குத் தெரியாது. ஒரு சிலருக்கே இந்த வாய்ப்பு கிடைக்கிறது.

மரணத்தைச் சந்தித்துத் திரும்பிய ஒரு சிலரை நாம் பார்த்திருப்போம். எனக்குத் தெரிந்த ஒரு குரு இவ்வாண்டு மே மாதம் உரோமையிலிருந்து கனடாவிற்கு விமானத்தில் பறந்து கொண்டிருந்தார். நடு வானில் ‘ஹார்ட் அட்டாக்’ வந்தது அவருக்கு. அவருக்காக அந்த விமானம் நடுவில் ஓர் இடத்தில் தரையிறக்கப்பட்டு, அவர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இன்னும் பத்து நிமிடங்கள் தாமதித்திருந்தால், அவரது உயிர் பிரிந்திருக்கும் என்று மருத்துவர்கள் அவரிடமே சொன்னார்களாம். அவர்கள் அப்படி சொன்னபோது, அவருக்குள் இனம் தெரியாத ஒரு வித அமைதி வந்ததென அவர் கூறினார். மரணத்தை இவ்வளவு அருகில் பார்த்தபின் வேறு என்ன உள்ளது? என்று அவர் எண்ணங்கள் ஓடின. வாழ்வைப் பற்றிய ஒரு புது கண்ணோட்டம் தான் பெற்றதாக அவர் சொன்னார்.
மிக ஆபத்தான சாலை விபத்தில் பலமாக அடிபட்டு, மரண போராட்டம் நிகழ்த்தி வெற்றி கண்ட ஒர் அருள்சகோதரி இன்று அர்த்தமுள்ள பணிகள் செய்துவருவதை நான் அறிவேன். அன்புள்ளங்களே, மரணத்துடன் கை குலுக்கிவிட்டு மீண்டும் வாழும் வரம் பலருக்குக் கிடைக்காது. அந்த வரம் கிடைத்தவர்களுக்கு வாழ்க்கை பழையபடி இருக்காது.

ஒரு சிலருக்கு மரணத்திற்கு நாள் குறிக்கப்படுகிறது. புற்றுநோய் போன்ற உயிர் கொல்லி நோய் பலருக்கு மறு உலக வாழ்வைத் தருவதற்கு முன், இவ்வுலகிலேயே மாறியதொரு, புதியதொரு வாழ்வைத் தந்துள்ளது. இப்புதிய வாழ்வினால் ஒரு சிலர் அற்புத குணங்களும் பெற்றுள்ளனர். ஒரு சிலர் குணம் பெற முடியவில்லை எனினும் மரணத்தைச் சந்திக்கும் முன் இவ்வுலகையும், தங்களை சுற்றி உள்ளவர்களையும் வெகுவாக மாற்றியுள்ளனர்.
1984ம் ஆண்டு Greg Anderson என்பவருக்கு நுரையீரலில் புற்றுநோய் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் அளித்த வாழ்க்கை முப்பது நாட்களே. அவர்கள் சொன்ன அந்த முப்பது நாட்கள் முடிந்தன. இன்று 25 ஆண்டுகள் கழிந்து விட்டன. Greg Anderson இன்று உலகெங்கும் சென்று புற்றுநோயுடன் எப்படி வாழ முடியும், புற்றுநோயை எப்படி வெல்ல முடியும் என்று சொல்லித் தருகிறார். அவர் எழுதிய பல புத்தகங்களில், அவர் 1995ல் வெளியிட்ட புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்புத்தகத்தின் தலைப்பு: “நலமான வாழ்வடைய சிறிதும் பிசகாமல் கடைபிடிக்க வேண்டிய 22 விதி முறைகள்” (The 22 Non-Negotiable Laws of Wellness). புற்று நோய் உள்ளவர்களுக்கென எழுதப்பட்ட இந்த விதி முறைகள் நம் எல்லாருக்கும் தேவையான விதி முறைகள்.

இவ்விதம் 21 விதிகளைக் கூறிய Greg Anderson இவைகளுக்கெல்லாம் சிகரமாக 22வது விதிமுறையைத் தந்துள்ளார். "நிபந்தனையின்றி மன்னிக்கும் மனதை வளர்த்துக் கொள்." என்பது அவர் தந்துள்ள விதிகளின் சிகரம். இந்தச் சிகரத்தை அடைவது எவ்வளவு சிரமமென்று தன் வாழ்க்கையிலிருந்தே கூறுகிறார். அவரது மரணத்திற்கு மருத்துவர்கள் நாள் குறித்ததும், அவர் மேற்கொண்ட முதல் முயற்சி பிறரை மன்னிக்கும் முயற்சி... தன் மனதில் மன்னிக்க முடியாமல் பூட்டி வைத்திருந்தவர்களை விடுவிக்க முயன்றார். பல முறை தோற்றார். தன் தந்தையை மன்னித்ததிலிருந்து ஆரம்பமான இந்த முயற்சியால், விரைவில் தன் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்பட்டதென அவர் கூறியுள்ளார்.

Greg Anderson போலவே மரணத்திற்கு நாள் குறிக்கப்பட்ட மற்றொருவர் Randy Pausch என்ற பேராசிரியர். கணணித்துறையில் வல்லுனரான இவருக்கு மனைவி, மூன்று குழந்தைகள் என்று அழகான குடும்பம். 2007ம் ஆண்டு இவரது கணையத்தைக் கரைத்துக் கொண்டிருந்த புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாண்டு அவர் பேராசிரியராகப் பணிசெய்த பல்கலைக் கழகத்தில் அவர் அளித்த "இறுதி சொற்பொழிவு" இன்று உலகப் புகழ்பெற்ற ஒரு சொற்பொழிவாக உள்ளது. YouTubeல் இந்த சொற்பொழிவைக் கோடிக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐயாயிரம் பேர் இந்த உரையை இன்றும் கேட்டு வருகின்றனர். உங்களது நேரத்தை ஒதுக்கி இந்த ஒரு மணி நேர உரையைக் கட்டாயம் கேளுங்கள். வாழ்வைப் பற்றிய பலத் தெளிவுகள் உங்களுக்கு உண்டாகும்.
Randy Pausch புற்று நோயோடு மேற்கொண்ட போராட்டம் 2008ம் ஆண்டு ஜூலை மாதம் அவரது 48வது வயதில் முடிந்தது. அவர் விட்டுச் சென்ற எண்ணங்கள், அவரது அந்த இறுதி சொற்பொழிவு ஒரு புத்தகமாக இப்போது பலரது வாழ்வில் தாக்கங்களை உண்டாக்கி வருகிறது. அவரது மரணத்திற்கு முன் தன் மனைவிக்கும், மூன்று குழந்தைகளுக்கும் அவர் 'இன்னும் சிறந்த வாழ்வுக்கு' ("guide to a better life") என்று எழுதி வைத்த விதி முறைகளில் ஒரு சில இதோ:


Greg Anderson, Randy Pausch போலவே, மரணத்திற்கு நாள் குறிக்கப்பட்ட இந்திய இளம்பெண் கீதாஞ்சலி (Gitanjali Ghei) 16 வயதிலேயே புற்று நோய்க்குப் பலியாகி இவ்வுலகை விட்டுச் சென்றாலும், தன் கவிதைகள் மூலம் இன்னும் தொடர்ந்து வாழ்ந்து வருகிறார். அவர் எழுதிவைத்த கவிதைகள் அவரது மரணத்திற்குப் பின் கண்டு பிடிக்கப்பட்டன. அவைகள் எல்லாமே பலருக்கும் நம்பிக்கை தரும் அற்புதச் செய்திகள். அந்தக் கவிதைத் தொகுப்பில் ஒன்று "அன்பு இறைவா" என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.
அன்பு இறைவா என் செபத்தைக் கேட்டருளும்.
உமது சித்தத்தை ஏற்றுக் கொள்ள எனக்குச் சக்தி தாரும்.
என் குற்றங்களை மன்னித்தருளும்.
என்னை இவ்வுலகினின்று எடுத்துக் கொள்வது உமக்கு விருப்பமானால்,
என் மீது அன்பு கொண்டவர்களுக்குச் சக்தியையும், மன உறுதியையும் தாரும்.
இது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி, நான் சுய பரிதாபத்தில் பிதற்றாமல் என்னைக் காத்தருளும்.
உமது விருப்பமே எனக்குச் சிறந்ததென என்னை நம்பச் செய்தருளும்.உம்மீது கொண்ட பயத்தினால் அல்ல; உம்மீது கொண்ட அன்பினால் உம்மை நம்பும் வரம் அருளும்.
இயேசு இன்றைய நற்செய்தியில் மறுவாழ்வைப் பற்றிக் கூறும்போது, "அவர்கள் வான தூதர்களைப் போல் இருப்பார்கள்" என்றார். மறு வாழ்வை நோக்கி நாம் மேற்கொள்ளும் பயணத்தில் Greg Anderson, Randy Pausch, Gitanjali Ghei போன்ற பல வானதூதர்களைச் சந்திக்க முடியும். கண்களையும், உள்ளத்தையும் திறந்து இவ்வுலகப் பயணத்தை மேற்கொள்வோம்.







All the contents on this site are copyrighted ©.