2010-11-06 16:15:08

சந்தியாகோ தெ கொம்போஸ்தெல்லாவில் திருத்தந்தை


நவ.06,2010. அடக்கம், அன்பு, தேடல், இறைசந்திப்பு போன்ற செய்திகளுடன் இச்சனிக்கிழமை ஸ்பெயின் நாட்டு சந்தியாகோ தெ கொம்போஸ்தெல்லா நகருக்குத் தனது முதல் திருப்பயணத்தைத் தொடங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். உரோம் ஃபியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து காலை 8.30 மணிக்கு Airbus 320 ஆல்இத்தாலியாவில் புறப்பட்ட திருத்தந்தை, 1711 கிலோ மீட்டர் தூரத்தைச் சுமார் மூன்று மணி நேரம் பயணம் செய்து ஸ்பெயின் நாட்டின் சந்தியாகோ தெ கொம்போஸ்தெல்லா நகரின் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்தார். விமானத்தைவிட்டு இறங்கிய அவரை அந்நாட்டின் ஆஸ்தூரியெ இளவரசர் Felipe யும் அவரது மனைவி லெட்டீத்சியாவும் அவரின் கைகளை முத்தி செய்து வரவேற்றனர். சுற்றுச்சூழல் பனிமூட்டமாக இருந்தது. சிவப்பு கம்பள விரிப்பில் இவர்கள் மூவரும் நடந்து சென்ற போது சிறிது தூரம் தள்ளி நின்ற மக்கள் “ Viva il Papa திருத்தந்தை வாழ்க” என்று சப்தமாகச் சொல்லிக் கொண்டே நின்றனர். அங்கு இடம் பெற்ற இராணுவ அணிவகுப்பு மரியாதைகளுக்குப் பின்னர் இளவரசர் Felipe வரவேற்புரை வழங்கினார்.

ஸ்பெயின் மீது திருத்தந்தை கொண்டுள்ள பாசம் மிகுந்த மதிப்பு மிக்கது. 2011ம் ஆண்டு ஆகஸ்டில் உலக இளையோர் தினத்தைச் சிறப்பிக்கத் திருத்தந்தையே, தாங்கள் மீண்டும் ஸ்பெயின் வரவுள்ளீர்கள். விசுவாசம், அமைதி, நம்பிக்கை ஆகிய செய்திகளை வழங்க திருப்பயணியாக இங்கு வந்துள்ளீர்கள். அமைதி, சுதந்திரம், மனித மாண்பு, ஜனநாயகம் ஆகியவற்றுக்கானத் தங்களின் அர்ப்பணம் மிகவும் பாராட்டத்தக்கது. உலகில் நெருக்கடிகள் எதிர்நோக்கப்படும் குறிப்பாக, சண்டையும் பயங்கரவாதமும் பசியும் வறுமையும் அநீதியும் வேதனையும் சூழ்ந்த நேரத்தில் தங்களின் வருகை மகிழ்ச்சியளிக்கின்றது.

இளவரசர் Felipe ன் வரவேற்புரைக்குப் பின்னர் திருத்தந்தையும் உரை வழங்கினார்.

கொம்போஸ்தெல்லா விமான நிலைய வரவேற்பில் திருத்தந்தை உரையாற்றி முடித்த போது மக்கள் உரக்கக் கைதட்டினர். பெனெதெத்தோ பெனெதெத்தோ என்றும் வாழ்த்திக் கொண்டிருந்தனர். விமானநிலையத்தில் இளவரசர் Felipe குடும்பத்தினரைத் தனியே சந்தித்தார். 1968ம் ஆண்டு மத்ரித்தில் பிறந்த இளவரசர், சட்டம், பொருளாதாரம், சர்வதேச உறவுகள் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றுள்ளவர். மேலும், ஸ்பெயினின் துணைப் பிரதமர் Alfredo Rubalcaba Rubalcaba வையும் விமானநிலையத்தில் சந்தித்தார்.

விமானநிலைய வரவேற்புகள் முடிந்து திறந்த காரில் சந்தியாகோ தெ கொம்போஸ்தெல்லா பேராலயம் சென்றார் திருத்தந்தை. இயேசுவின் 12 திருத்தூதர்களில் ஒருவரான புனித யாகப்பரின் கல்லறை மீது இப்பேராலயம் கட்டப்பட்டுள்ளது. சந்தியாகோ என்றால் இலத்தீனில் Sanctu Iacobu அதாவது “புனித யாக்கோபு” என்றும் கொம்போஸ்தெல்லா என்றால் Campus Stellae அதாவது “விண்மீன்களின் வயல்” என்றும் பொருள். இப்பேராலயத்திற்கு ஆயிரம் ஆண்டுகளாகத் திருப்பயணமும் இடம் பெற்று வருகிறது. இந்தப் பயணத்தை ஸ்பானியத்தில் Camino de Santiago அதாவது “புனித யாகப்பரின் பாதை” என்று அழைக்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் ஒரு இலட்சத்துக்கு அதிகமானத் திருப்பயணிகள் இங்கு செல்கின்றனர். திருத்தந்தையின் இப்பயணத்தையொட்டி ஸ்பெயினின் தொலேதோ பேராயர் ப்ரவ்லியோ ரொட்ரிக்கெஸ், 750 இளையோருடன் 13 மைல் நடந்து சென்றுள்ளார்.

இந்த புனித யாகப்பர் பேராலயத்திற்கு முன்னர் கூடியிருந்த விசுவாசிகள் கூட்டத்தை வாழ்த்திய பின்னர் அப்பேராலயத்தின் புனிதக் கதவு வழியாக உள்ளே சென்று அப்புனிதரின் சமாதி முன்னர் செபித்தார் திருத்தந்தை. பின்னர் அப்புனிதரின் திருவுருவச் சிலையைக் கட்டித்தழுவி முத்தமிட்டார். அதன்பின்னர் சந்தியாகோ தெ கொம்போஸ்தெல்லா பேராயர் ஜூலியன் பாரியோ பாரியோ திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார்.

புனித யாகப்பர் நம்பிக்கையின் அடையாளமாக இருக்கிறார். பல நிச்சயமற்றகூறுகளும் அதேசமயம் பெரும் நம்பிக்கைகளும் காணப்படும் இக்காலத்தில், கிறிஸ்துவே எல்லாவற்றையும் கடந்த நம்பிக்கை என்பது இவ்விடத்திலிருந்து எதிரொலிக்கட்டும். நாங்கள் கொண்டாடும் இந்த கொம்போஸ்தெல்லன் ஜூபிலி ஆண்டு கிறிஸ்தவ நம்பிக்கைக்கு அழைப்பு விடுப்பதாக இருக்கின்றது. திருத்தந்தையே இங்கு உமது இருப்பு மகிழ்ச்சி நிறைந்ததாக அமையட்டும்.

பேராயர் பாரியோவின் உரைக்குப் பின்னர் திருத்தந்தையும் உரை வழங்கினார்.

அப்பேராலயத்திற்கு அருகிலுள்ள பேராயர் இல்லத்தில் மதிய உணவருந்தி ஓய்வும் எடுத்தார். சந்தியாகோ தெ கொம்போஸ்தெல்லாவில் திருத்தந்தையின் திறந்த கார் சென்ற சாலையெங்கும் மக்கள் பாப்பிறைக் கொடிகளுடன் வெள்ளமென திரண்டு நின்று அவரை வாழ்த்தியதைப் பார்க்க முடிந்தது. இச்சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொம்போஸ்தெல்லா ஜூபிலி ஆண்டுத் திருப்பலியை நிகழ்த்தி பார்செலோனாவுக்குப் புறப்படுவது இந்நாளைய பயணத் திட்டத்தில் உள்ளது.

92.5 விழுக்காட்டுக் கத்தோலிக்கரைக் கொண்ட ஸ்பெயின் நாட்டில் அதனை நடைமுறைப்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே இக்கத்தோலிக்கரின் விசுவாசம் ஆழப்பட புனித யாகப்பரின் பரிந்துரையைக் கேட்போம்.








All the contents on this site are copyrighted ©.