2010-11-05 15:20:05

வானதூதர்களிடம் பக்தி கொண்ட பிரிவினைவாத இயக்கம் குறித்து வத்திக்கான் எச்சரிக்கை


நவ.05,2010. வானதூதர்களிடம் தீவிரப் பக்தி கொண்ட Opus Angelorum என்ற இயக்க உறுப்பினர்களின் நடவடிக்கைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம் உலக ஆயர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வானதூதர்களை மையப்படுத்தும் திருவழிபாடுகள் உட்பட இவ்வியக்கத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் 18 ஆண்டுகளுக்கு முன்னர் தடை செய்யப்பட்டன, ஆயினும் அந்நடவடிக்கைகளை மீண்டும் உயிர்பெறச் செய்வதற்கான முயற்சிகள் தற்சமயம் இடம் பெற்று வருகின்றன என்று அப்பேராயம் எச்சரித்துள்ளது.

இவ்வியக்கத்தினர், விசுவாசிகள் மத்தியில் வானதூதர்கள் மீதான பக்தியைப் பரப்பி, குருக்களுக்காகச் செபிக்கத் தூண்டுகின்றனர் என்றும், கிறிஸ்துவின் திருப்பாடுகள் மீது அன்பையும் அவரோடு ஒன்றித்திருப்பதையும் வளர்க்கின்றனர் என்றும் இப்பேராயம் உலக ஆயர் பேரவைகளுக்கு அனுப்பியுள்ள கடிதம் கூறுகிறது.

Opus Angelorum இயக்கம் திருச்சபையோடு ஒன்றிணைந்து இருந்தாலும், முன்பு இதிலிருந்து வெளியேறிய குருக்கள் உட்பட இதன் உறுப்பினர்கள் “உண்மையான Opus Angelorum” என்ற புதிய இயக்கத்தை உருவாக்க முயற்சித்து வருகின்றனர் என்று அக்கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்ட்ரியாவின் இன்ஸ்ப்புருக்கில் Gabriele Bitterlich என்ற பெண் 1946ம் ஆண்டில் வானதூதர்களைக் காட்சியில் கண்டதாகக் கூறியதையடுத்து "வானதூதர்களின் வேலை" என்று பொருள்படும் Opus Angelorum என்ற இயக்கம் உருவானது.

இவ்வியக்கம், ஆஸ்ட்ரியா, ஜெர்மனி, போர்த்துக்கல், பிரேசில், இந்தியா ஆகிய பகுதிகளில் முக்கியமாகச் செயல்பட்டு வருகிறதாகச் சொல்லப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.