2010-11-05 15:30:48

நவம்பர் 06. நாளும் ஒரு நல்லெண்ணம்


பாவம் எனத்தெரிந்திருந்தும் ஒருவன் அதையேச் செய்கிறான் என்றால் அதற்கு ஆசையும் ஆணவமுமே காரணம். தனக்குச் சுகம் தருபவைகளின் மீது ஆசைப்பட்டு அவைகளை அடைய தவறான பாதைகளில் நடக்கும்போது அது பாவமாகிறது. அதிலிருந்து குற்ற உணர்வும் பிறக்கலாம், கல் நெஞ்சும் ஆகலாம். மனசாட்சியை மறைத்து வைத்து வாழ்வைத் தொடரலாம் என்ற சபலம் கூட ஏற்படுகின்றது. கோவிலுக்குத் தவறாமல் சென்று இறைவனை வழிபடுபவர்கள் கூட ஏமாற்று வேலைகளிலும் கடத்தல்களிலும் ஈடுபடுகிறார்களே அது எப்படி அவர்களுக்குச் சாத்தியமாகிறது, அவர்களின் மனச்சாட்சி உறுத்தவில்லையா என்ற கேள்வி நமக்கு எழலாம். வாழ்விற்கும் வழிபாட்டிற்கும் இடையேயான இடைவெளியே இதற்கு காரணம். ஒன்றையொன்று தொடுவதில்லை. இறைவன் படைப்பில் மனிதனுடைய செயல்கள் மட்டும் தான் பாவபுண்ணிய கணக்கில் வரும். மற்ற ஜீவன்களுக்கு அத்தகையச் சூழ்நிலை இல்லை என்பர் ஞானிகள். இத்தகைய பாவ நிலைகளுக்கெல்லாம் காரணம், நம் மீதானக் கட்டுப்பாட்டை நாம் இழப்பதாகும். ஆசைகளின் போக்கிலேயே நாம் கட்டுப்பாடின்றி அலைந்தால் விபத்துக்களே நேரும். மனம் எனும் வண்டியை நாம் ஓட்டுவோம். அந்த வண்டி நம்மை ஓட்ட அனுமதிக்க வேண்டாம்.








All the contents on this site are copyrighted ©.