2010-11-05 15:18:07

கியூபா- புதியக் குருத்துவக் கல்லூரிக்குத் திருத்தந்தை வாழ்த்து


நவ.05,2010.கியூபாவில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள குருத்துவப் பயிற்சிக் கல்லூரியைப் பிறரன்பு அன்னையிடம் அர்ப்பணித்த அதேவேளை, குருத்துவ மாணவர்கள் செபம் மற்றும் படிப்பு மூலம் கிறிஸ்துவோடு தங்களை ஒன்றிணைக்குமாறு திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.

புதிய குருத்துவக் கல்லூரி திறப்பு விழாவுக்குத் தனது பிரதிநிதியாகச் சென்றத் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே வழியாகத் திருத்தந்தை அனுப்பிய செய்தியில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கியூபத் தலைநகர் ஹவானாவில் இடம்பெற்ற இத்திறப்பு விழா நிகழ்ச்சியில் அந்நாட்டு அரசுத் தலைவர் ராவ்ல் காஸ்ட்ரோவும் (Raul Castro) கலந்து கொண்டார்.

புனிதர்கள் சார்லஸ் அம்புரோஸ் பெயரிலான இக்கல்லூரி முதலில் 1948ம் ஆண்டில் கட்டப்பட்டது. பின்னர் கியூபாவில் ஏற்பட்ட கம்யூனிசப் புரட்சியின் போது 1966ம் ஆண்டில் திருச்சபை அதிகாரிகள் இதனைக் கியூப அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது. இதனை முதலில் இராணுவக் கூடமாக மாற்றிய அதிகாரிகள் பின்னர் காவல்துறைக் கல்விக்கூடமாக மாற்றினர். அக்கம்யூனிசப் புரட்சிக்குப் பின்னர் சுமார் 75 விழுக்காட்டுக் குருக்கள் இத்தீவு நாட்டைவிட்டு வெளியேறினர்.

தற்போது அரசுக்கும் திருச்சபைக்கும் இடையே நிலவும் நல்லுறவின் அடையாளமாக ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் இக்கல்லூரி புதுப்பிக்கப்பட்டு இப்புதனன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.