2010-11-03 15:39:13

ஈராக் கத்தோலிக்கரின் வன்முறை இறப்புகள் குறித்து திருத்தந்தை அதிர்ச்சி


நவ.03,2010. ஈராக்கில் முஸ்லீம் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 58 கத்தோலிக்கரின் அடக்கச் சடங்கையொட்டித் தனது அனுதாபச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பாக்தாத் நமது மீட்பரின் அன்னை சிரியரீதி கத்தோலிக்கப் பேராலயத்தில் இஞ்ஞாயிறன்று திருப்பலி நடைபெற்றுக் கொண்டிருந்த போது அல்கெய்தா இயக்கத்துடன் தொடர்புடைய மனிதர்கள் 120க்கும் மேற்பட்ட விசுவாசிகளைத் துப்பாக்கி முனையில் பிணையல் கைதிகளாக்கினர். எனினும், ஈராக் இராணுவம் அப்பேராலயத்தை முற்றுகையிட்டு அக்கைதிகளை மீட்டனர். இம்மீட்புப் பணியில் இரண்டு குருக்கள் உட்பட 58 பேர் கொல்லப்பட்டனர்.
இதில் இறந்தவர்கள் இச்செவ்வாயன்று அடக்கம் செய்யப்பட்டதையடுத்து பாக்தாத் சிரியரீதி கத்தோலிக்கப் பேராயர் Athanase Matti Shaba Matokaக்கு இரங்கல் தந்தி அனுப்பிய திருத்தந்தை, இச்சடங்கில் தான் ஆன்மீகரீதியில் பங்கு கொள்வதாகவும், இதில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் நிறைசாந்தியடையத் தான் செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வன்முறையில் இறந்துள்ளவர்களின் தியாகம் இந்நாட்டில் அமைதி மற்றும் உண்மையான மறுவாழ்வின் வித்தாக அமையட்டும், இதன்மூலம் ஒப்புரவு, தோழமை மற்றும் சகோதரத்துவ நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொள்வோர் நன்மை செய்வதற்கான வல்லமையைக் கண்டு கொள்வார்கள் என்று அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை. அன்புக்குரிய இந்த ஈராக் நாடு ஆண்டுக்கணக்காய்ச் சொல்ல முடியாத இன்னல்களால் துன்புற்று வருகின்றது என்றும், நம்பிக்கையிலும் அமைதியான நல்லிணக்கத்திலும் வாழ விரும்பும் கிறிஸ்தவர்கள் வன்முறைத் தாக்குதல்களின் பொருட்களாக மாறி வருகின்றனர் என்றும் தனது கவலையைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.