2010-11-03 15:40:53

இலங்கையின் Negombo கடல் பகுதியில் அரசு மேற்கொள்ளவிருக்கும் ஒரு திட்டத்திற்கு தலத்திருச்சபை குருக்களும் மீனவர்களும் எதிர்ப்பு


நவ.03,2010. இலங்கையின் Negombo கடல் பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கு அரசு மேற்கொள்ளவிருக்கும் ஒரு திட்டத்தை எதிர்க்கும் மீனவர்களுடன் தலத்திருச்சபை குருக்களும் இணைந்துள்ளனர்.
இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஒரு முயற்சியாக, Negombo பகுதியில், கடலில் வந்திறங்கும் விமானங்கள் என்ற திட்டத்தை அரசு மேற்கொள்ள இருக்கிறது.
இத்திட்டத்தால், அப்பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, அப்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள பலரது வாழ்வின் ஆதாரம் அழிக்கப்படும் என்று அங்குள்ள மீனவர்கள் இத்திட்டத்தை எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் கடந்த ஞாயிறன்று கொண்டாடப்பட்ட புனித யூதா ததேயுவின் திருவிழா நேரத்தில் அப்பகுதி மீனவர்களுக்காகச் சிறப்புத் திருப்பலிகளும், செபங்களும் மேற்கொள்ளப்பட்டன.
கொழும்பு உயர்மறைமாவட்ட குருகுல முதல்வர் அருள்தந்தை பேட்ரிக் பெரேரா, Negombo மீனவர் கழகத்தின் இயக்குனர் அருள்தந்தை Lester Nonis ஆகியோர் உட்பட பல குருக்களும், துறவறத்தாரும் இச்செப முயற்சிகளில் ஈடுபட்டனர்.Negombo பகுதியில் உள்ள கடற்கரை இறைவன் படைத்த இயற்கை அழகின் ஒரு பகுதி. அப்பகுதியின் அழகைக் கெடுத்து, மீனவர்கள் வாழ்வையும் சீர்குலைக்கும் இத்திட்டத்திற்கு எதிராகத் தலத் திருச்சபை தன் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதென்று அப்பகுதியின் பங்குத் தந்தை அருள்திரு பேசில் விக்ரமசிங்கே கூறினார்.







All the contents on this site are copyrighted ©.