2010-11-02 15:54:12

நவம்பர் 03நாளுமொரு நல்லெண்ணம்


நவம்பர் 1 அனைத்துப் புனிதர்களின் திருவிழா. நவம்பர் 2 இறந்தோர் அனைவரின் நினைவு நாள். இவ்விரு நாட்களும் ஒன்றையொன்று தொடர்ந்து வருவது மனதில் ஒரு சில எண்ணங்களை எழுப்புகிறது. இவ்விரு நாட்களும் முன்பின் முரணாக வந்துள்ளனவோ என்று சில சமயங்களில் நான் நினைப்பதுண்டு. இறப்புக்குப் பின் புனிதமா? அல்லது புனிதம் அடைந்தபின் இறப்பா?
பொதுவாக ஒருவர் இறந்ததும் அவரைப் பற்றிய நல்லவைகள் பேசப்படும். மரணம் ஒருவரது குறைகளைக் குறைத்துவிடும் வல்லமை பெற்றது. ஒருவர் இறந்தபின், மறைந்தபின் அவரைப் பற்றி நாம் கூறும் நல்லவைகளை அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரது முன்னிலையில், அவர் காதுபட கூறியிருந்தால், அவர் இன்னும் நல்ல வழியில் வாழ்ந்திருப்பாரே.
இறந்த பின் வழங்கப்படும் புகழ் மாலைகளை, நல்லவர் என்ற மரியாதையை வாழும்போதே ஒவ்வொருவருக்கும் நாம் கொடுத்தால், இவ்வுலகில் வாழும் புனிதர்களின் எண்ணிக்கை அதிகமாகுமே. புனிதர்கள் விண்ணுலகில்தான் இருக்கவேண்டும் என்றில்லையே. தாங்கள் நல்லவர்கள் என்று வாழ்நாள் எல்லாம் உணரும் மனிதர்கள், புனிதர்களான நிறைவோடு இவ்வுலகை விட்டு விடைபெற்று போகலாமே.இந்த எண்ணத்தை வலியுறுத்தும் நோக்கத்தில்தான் திருச்சபை அனைத்துப் புனிதர்கள் நாள், இறந்தோரின் நினைவு நாள் என்ற வரிசையில் இவ்விரு நாட்களையும் கொண்டாட நம்மை அழைக்கிறதோ? சிந்திக்க வேண்டிய கருத்து.







All the contents on this site are copyrighted ©.