2010-11-02 15:37:40

சுற்றுச்சூழல் பிரச்னைகளைச் சமாளிப்பதற்கு சமூகத்தின் ஒன்றிணைந்த நடவடிக்கைகளுக்கு அழைப்பு.


நவ 02, 2010. சுற்றுச்சூழல் பிரச்னைகளைச் சமாளிப்பதற்கு சமூகத்தின் ஒன்றிணைந்த நடவடிக்கைகள் தேவைப்படுவதாக அறிவித்துள்ளனர் இந்தியாவின் நன்னெறி இறையியலாளர்கள்.

பங்களூருவின் நவா இஸ்பூர்த்தி கேந்திராவில் இடம்பெற்ற இந்திய நன்னெறி இறையியலாளர்களின் ஆண்டு கூட்டத்தில் இதனை அறிவித்த இறையியலாளர்கள், இயற்கையுடனும் சுற்றுச்சுழலுடனும் இணக்கத்தில் வாழ உதவும் வகையில் புனிதர்கள் எஃப்ரேம் மற்றும் ஃபிரான்சிஸ் அசிசியின் எடுத்துக்காட்டுக்களையும் முன்வைத்தனர்.

தனிப்பட்ட முறையில் சுத்தத்தைப் பேணுதல், படைப்பின் நோக்கத்தை உணர்தல், பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தாதிருத்தல், உடல் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தல் போன்றவைகளை ஊக்குவிக்கும் வண்ணம் இக்கருத்தைப் பள்ளிகள், கல்லூரிகள் மூலம் பரப்புதல் போன்றவைகளையும் வலியுறுத்தினர் நன்னெறி இறையியலாளர்கள்.

பத்திரிகைகளில் எழுதியும், பல்வேறு குழுக்களுடன் ஆன கருத்தரங்குகள் மூலமும் சுற்றுச்சூழல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தீர்மானித்துள்ளனர் இந்திய நன்னெறி இறையியலாளர்கள்.








All the contents on this site are copyrighted ©.