2010-11-01 15:25:16

தென்னாப்ரிக்கத் தமிழர்களின் 150 ஆண்டுகள் கொண்டாட்டங்கள்


நவம்பர் 1, 2010 - தென்னாப்ரிக்காவுக்குத் தமிழர்கள் சென்று குடியேறி 150 ஆண்டுகள் நிறைவடைவதை மிகப்பெரிய விழாவாகக் கொண்டாட அந்நாட்டு தமிழர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். அந்த கொண்டாட்டங்களில் தென்னாப்ரிக்க அதிபர் ஜேகப் ஜூமா கலந்துகொள்ள இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள், தென்னாப்ரிக்காவில் உள்ள கரும்புத் தோட்டங்களில் கூலிகளாக வேலை செய்வதற்கென ஆயிரக்கணக்கான தமிழர்கள் உள்ளிட்ட பல இந்தியர்களை 1860ம் ஆண்டு துவங்கி 1911 வரை அங்கு கொண்டு சென்றனர்.

இன்றைய நிலையில், சுமார் பதினான்கு லட்சம் இந்திய வம்சாவளியினர் தென்னாப்ரிக்காவில் தற்போது வாழ்கின்றனர். அவர்களில் சுமார் பத்து லட்சம் பேர் தமிழர்கள் என்று சில புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்திய வம்சாவளியினர் தென்னாப்ரிக்காவுக்குச் சென்றதன் நூற்றி ஐம்பதாவது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக நவம்பர் 29ம் தேதி தென்னாப்ரிக்காவில் இருக்கும் டர்பன் நகரில் மிகப்பெரும் விழா ஒன்றை அவர்கள் நடத்த உள்ளனர். அதில் தென்னாப்ரிக்க அதிபர் ஜூமா கலந்துகொள்ள இருக்கிறார்.

தென்னாப்ரிக்கத் தமிழர்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தது. தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியையும் இன்னும் சில தலைவர்களையும் இக்குழுவினர் சந்தித்தனர்.

தென்னாப்ரிக்காவில் நடக்க இருக்கும் 150ம் ஆண்டு கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள தமிழக அரசின் பிரதிநிதிகளை அனுப்புமாறு கோரிய இந்த குழுவினர், தென்னாப்ரிக்காவில் இருக்கும் தமிழ் குழந்தைகளுக்குத் தமிழைப் பயிற்றுவிக்க உதவும் வகையில் தமிழக அரசு பாடநூல்களையும், ஆசிரியர்களையும் அளித்து உதவ வேண்டும் என்பது உட்பட சில கோரிக்கைகளை தமிழக அரசிடம் இக்குழுவினர் வைத்ததாக பிபிசி செய்திக் குறிப்பு கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.